சாம்பியன்ஸ் கோப்பை: கெய்லை பின்னுக்கு தள்ளி முதல் இடம் பிடிக்க கோலிக்கு வாய்ப்பு
- சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்களில் கிறிஸ் கெய்ல் முதலிடம் வகிக்கிறார்.
- 3-வது இடத்தில் இந்தியாவின் ஷிகர் தவான் உள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி முதல் இடம் பிடிக்க வாய்ப்பு உள்ளது. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வெஸ்ட்இண்டீசின் கிறிஸ் கெய்ல் முதலிடம் (17 ஆட்டத்தில் 3 சதம் உள்பட 791 ரன்) வகிக்கிறார்.
2-வது இடத்தில் இலங்கையின் மஹேலா ஜெயவர்த்தனேவும் (742 ரன்), 3-வது இடத்தில் இந்தியாவின் ஷிகர் தவானும் (10 ஆட்டத்தில் 3 சதம் உள்பட 701 ரன்) உள்ளனர். இவர்கள் அனைவரும் ஓய்வு பெற்று விட்டனர்.
கெய்லின் சாதனையை முறியடிக்க இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு அருமையான வாய்ப்பு கிட்டியுள்ளது. கோலி இதுவரை 13 ஆட்டத்தில் ஆடி 5 அரைசதம் உள்பட 529 ரன் எடுத்துள்ளார். இன்னும் 263 ரன்கள் எடுத்தால் சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் அதிக ரன் எடுத்த வீரர் என்ற சாதனையை படைக்க முடியும்.
இந்திய கேப்டன் ரோகித் சர்மா 481 ரன்கள் (10 ஆட்டம்) எடுத்துள்ளார். அனேகமாக ரோகித் சர்மாவின் கடைசி சாம்பியன்ஸ் கோப்பை போட்டியாக இது இருக்கும் என்பதால் அவரும் முத்திரை பதிக்க முயற்சிப்பார்.
அதிக விக்கெட் வீழ்த்தியோர் பட்டியலில் டாப்-3 இடங்களில் நியூசிலாந்தின் கைல் மில்ஸ் (28 விக்கெட்), இலங்கையின் மலிங்கா (25 விக்கெட்), முரளிதரன் (24 விக்கெட்) ஆகியோர் உள்ளனர்.