இரண்டாவது இன்னிங்சில் அதிரடி ஆட்டம்: ரிஷப் பண்டுக்கு சச்சின் பாராட்டு
- ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 181 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- இரண்டாம் நாள் முடிவில் இந்தியா 6 விக்கெட்டுக்கு 141 ரன்கள் எடுத்துள்ளது.
சிட்னி:
இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் சிட்னியில் நடந்து வருகிறது.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 185 ரன்களில் ஆல் அவுட் ஆனது. ரிஷப் பண்ட் 40 ரன்கள் எடுத்தார்.
ஆஸ்திரேலியா சார்பில் போலன்ட் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 181 ரன்களில் சுருண்டது. வெப்ஸ்டர் 57 ரன்கள் எடுத்தார்.
இந்தியா சார்பில் பிரசித் கிருஷ்ணா, சிராஜ் தலா 3 விக்கெட்டும், பும்ரா, நிதிஷ்குமார் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
4 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. இரண்டாம் நாள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுக்கு 141 ரன்கள் எடுத்துள்ளது. ஜடேஜா 8 ரன்களுடனும், வாஷிங்டன் சுந்தர் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இந்தப் போட்டியில் ரிஷப் பண்ட் தனது வழியில் அதிரடியாக விளையாடினார். ஸ்டார்க் ஓவரில் தொடர்ச்சியாக 2 சிக்சர்களை பறக்கவிட்டு அரைசதம் அடித்த அவர் 61 ரன்களில் (33 பந்துகள்) ஆட்டமிழந்தார்.
இந்நிலையில், அதிரடியாக விளையாடி அரை சதமடித்த ரிஷப் பண்டுக்கு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சச்சின் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள செய்தியில், பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் ஸ்டிரைக் ரேட் 50 அல்லது அதற்கும் குறைவாக பேட் செய்த ஆடுகளத்தில், ரிஷப் பண்ட் 184 ஸ்டிரைக் ரேட் உடன் ஆடியது உண்மையிலேயே குறிப்பிடத்தக்க ஒன்று. அவர் முதல் பந்தில் இருந்து ஆஸ்திரேலியாவைத் திணறடித்தார். அவர் பேட்டிங் செய்வதைப் பார்ப்பது எப்போதும் சிறப்பாக இருக்கிறது. என்ன ஒரு அபாரமான இன்னிங்ஸ் என பதிவிட்டுள்ளார் .