இது எங்கள் ஹோம் பிட்ச் இல்லை.. விமர்சனங்களுக்கு ரோகித் பதிலடி
- சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது.
- இந்தியா அனைத்துப் போட்டிகளையும் ஒரே மைதானத்தில் விளையாடுவதாக விமர்சனங்கள் எழுந்தது.
சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணிக்கான ஆட்டங்கள் மட்டும் துபாயில் விளையாடுகிறது. இந்த தொடரில் இந்திய அணி அனைத்துப் போட்டிகளையும் ஒரே மைதானத்தில் விளையாடுவதாக முன்னாள் வீரர்கள் மற்றும் இந்த தொடரில் விளையாடும் வீரர்கள் என பலர் விமர்சனம் செய்தனர்.
இந்நிலையில் இது துபாய் எனவும் இது எங்கள் ஹோம் பிட்ச் இல்லை எனவும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ஒவ்வொரு முறையும், ஆடுகளம் உங்களுக்கு வெவ்வேறு சவால்களைத் தருகிறது. நாங்கள் இங்கு விளையாடிய மூன்று போட்டிகளிலும், ஆடுகளம் வித்தியாசமாக இருந்தது. இது எங்கள் ஹோம் பிட்ச் கிடையாது. இது துபாய். அரையிறுதியில் எந்த பிட்சில் விளையாடப் போகிறோம் என எங்களுக்கே தெரியாது. இந்த மைதானம் எங்களுக்கும் புதிதுதான். நாங்கள் இங்கு நிறைய போட்டிகள் விளையாடியதில்லை.
நியூசிலாந்து பந்து வீச்சாளர்கள் பந்து வீசும்போது, அது கொஞ்சம் ஸ்விங் ஆவதை நாங்கள் கண்டோம். எங்கள் பந்து வீச்சாளர்கள் பந்து வீசும் முதல் இரண்டு ஆட்டங்களில் நாங்கள் அதை பார்க்கவில்லை. கடந்த ஆட்டத்தில், அவ்வளவு சுழற்சியை நாங்கள் பார்க்க முடியவில்லை. இன்று அது கொஞ்சம் இருந்தது. எனவே, ஒவ்வொரு மேற்பரப்பிலும் வெவ்வேறு விஷயங்கள் நடக்கின்றன. எனவே, இந்த மைதானத்தில் என்ன நடக்கப் போகிறது, என்ன நடக்கப் போவதில்லை என்பது எங்களுக்குத் தெரியாது.
என கேப்டன் ரோகித் சர்மா கூறினார்.