100 படுக்கை வசதியுடன் ரூ.81 கோடி மதிப்பில் கட்டப்பட்ட இ.எஸ்.ஐ., மருத்துவமனை இன்று திறப்பு
- திருப்பூர், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 6 லட்சம் தொழிலாளர்கள் இ.எஸ்.ஐ.க்கு பணம் செலுத்தி வருகிறார்கள்.
- தற்போது தமிழக அரசால் இடம் வழங்கப்பட்டு மத்திய அரசால் இ.எஸ்.ஐ. மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:
பின்னலாடை தொழில் நகரான திருப்பூரில் 10 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பை பெற்று வருகிறார்கள். வெளிமாவட்ட, வெளிமாநில தொழிலாளர்கள் இங்கு லட்சக்கணக்கில் தங்கி பணியாற்றி வருகிறார்கள். உள்நாடு மற்றும் வெளிநாடு ஏற்றுமதி மூலம் ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் நடக்கிறது. திருப்பூர், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 6 லட்சம் தொழிலாளர்கள் இ.எஸ்.ஐ.க்கு பணம் செலுத்தி வருகிறார்கள்.
இ.எஸ்.ஐ. பங்களிப்பில் முதன்மை இடத்தில் திருப்பூர் உள்ளதால், இங்குள்ள தொழிலாளர்களின் வசதிக்காக இ.எஸ்.ஐ. மருத்துவமனை கொண்டு வர வேண்டும் என்பது தொழில்துறையினர், தொழிலாளர்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் பிரசாரத்துக்கு திருப்பூர் வந்த பிரதமர் மோடி, திருப்பூர் பூண்டி ரிங் ரோட்டில் இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். 7½ ஏக்கர் பரப்பளவில் ரூ.81 கோடியே 34 லட்சம் மதிப்பில் 100 படுக்கை வசதி, 32 பணியாளர் குடியிருப்புகளுடன் மகப்பேறு சிகிச்சை மையம் உள்ளிட்ட வசதிகளுடன் கட்டுமான பணி தொடங்கியது.
இந்நிலையில் கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டு திறப்பு விழாவுக்கு இ.எஸ்.ஐ. மருத்துவமனை தயார்படுத்தப்பட்டது. இந்த நிலையில் பிரதமர் மோடி, காணொலிக்காட்சி மூலமாக இன்று மதியம் 3 மணிக்கு திருப்பூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனையை திறந்து வைத்து தொழிலாளர்களுக்கு அர்ப்பணிக்கிறார். இந்த மருத்துவமனை மூலம் மருத்துவ சேவைகள் தொழிலாளர்களுக்கு மருத்துவ சேவைகள் கிடைக்கும். இதன் மூலமாக திருப்பூர், ஈரோடு மாவட்ட தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கோவை சிங்காநல்லூர் சென்று சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் இங்கேயே சிகிச்சை பெற தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளதால் பனியன் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்தநிலையில் திருப்பூரில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை கொண்டுவர அடித்தள மிட்டது எம்.எல்.எப்., தொழிற்சங்கம்தான் என்று ம.தி.மு.க.வில் இருந்து ராஜினாமா செய்த முன்னாள் எம்.எல்.ஏ. திருப்பூர் துரைசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-
திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள இ.எஸ்.ஐ. மருத்துவனையை பிரதமர் மோடி இன்று திறந்து வைப்பதாக தகவல் கிடைத்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை கொண்டு வருவதற்கு அடித்தளமிட்டது எம்.எல்.எப். தொழிற்சங்கம் தான். கடந்த 2005-ம் ஆண்டு மே மாதம் 1-ந் தேதி திருப்பூர் டவுன்ஹால் அரங்கில் நடைபெற்ற எம்.எல்.எப். தொழிற்சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து மத்திய அரசு அப்போது 3 படுக்கையுடன் கூடிய மருத்துவமனை அமைக்க அனுமதி வழங்கியது. அதன் பிறகு இந்த மருத்துவமனையை விரிவுபடுத்துவதற்கான இடத்தை தமிழக அரசு தராமல் காலம் தாழ்த்தி வந்தது.
இதையடுத்து தற்போது தமிழக அரசால் இடம் வழங்கப்பட்டு மத்திய அரசால் இ.எஸ்.ஐ. மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையை பிரதமர் மோடி நேரில் வந்து திறந்திருக்க வேண்டும் அல்லது தொழில்துறை, மருத்துவ துறை மந்திரிகளில் யாராவது ஒருவர் நேரில் வந்து திறந்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.