தமிழகம் முழுவதும் அசைவ ஓட்டல்களில் நடத்திய சோதனையில் 1187 கிலோ இறைச்சி பறிமுதல்
- சென்னையில் அசைவ ஓட்டல்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி கிலோ கணக்கில் கெட்டுப்போன இறைச்சியை பறிமுதல் செய்தனர்.
- 5 கடைகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை:
நாமக்கல்லில் சவர்மா சிக்கன் உணவு சாப்பிட்ட சிறுமி பலியான சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அசைவ உணவகங்களில் அடிக்கடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சென்னையிலும் அசைவ ஓட்டல்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி கிலோ கணக்கில் கெட்டுப்போன இறைச்சியை பறிமுதல் செய்தனர்.
தமிழகம் முழுவதும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தியதை தொடர்ந்து தரமில்லாத உணவுகளை சமைத்து பரிமாறிய உணவகங்கள் மீது பொதுமக்கள் அதிக அளவில் புகார் அளித்துள்ளனர். இதுதொடர்பாக 307 புகார்கள் பெறப்பட்டு உள்ளன. இது தொடர்பாக உரிய விளக்கம் கேட்டு 206 கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது.
உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 1187 கிலோ அளவில் கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 115 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. ரூ.1 கோடி 61 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
5 கடைகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கூறும்போது, அசைவ உணவகங்களில் நடத்தப்பட்டு வரும் இந்த சோதனை தொடரும் என்று தெரிவித்துள்ளனர்.