சுட்டெரிக்கும் வெயில்- எலுமிச்சை கிலோ ரூ.150 ஆக அதிகரிப்பு
- எலுமிச்சை பழத்தின் தேவை அதிகரித்து வருவதால் அதன் விலை உயர்ந்து உள்ளது.
- கோயம்பேடு சந்தைக்கு வரும் எலுமிச்சை பழங்களின் வரத்து குறைந்து உள்ளது.
போரூர்:
சென்னையில் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பகல் நேரங்களில் அனல் காற்று வீசுகிறது.
இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி அடைந்து வருகிறார்கள். வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க சாலையோர கடைகளில் குளிர்பானம், எலுமிச்சை சாறு, கரும்புசாறு குடித்தும் தர்பூசணி உள்ளிட்ட நீர்சத்து அதிகம் உள்ள பழங்களை சாப்பிட்டும் வருகின்றனர்.
சுட்டெரிக்கும் வெயில் காரணமாக எலுமிச்சை பழத்தின் தேவை அதிகரித்து வருவதால் அதன் விலை உயர்ந்து உள்ளது.
கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த 2 வாரத்திற்கு முன்பு கிலோ ரூ.70-க்கு விற்கப்பட்ட எலுமிச்சை பழம் தற்போது ரூ.100-க்கு விற்கப்படுகிறது. வெளி மார்க்கெட்டில் உள்ள கடைகளில் கிலோ ரூ.150 வரை விற்பனை ஆகிறது. மேலும் கடைகளில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.7-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, எலுமிச்சை அதிகளவில் உற்பத்தி நடந்து வரும் ஆந்திர மாநிலத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருவதால் கோயம்பேடு சந்தைக்கு வரும் எலுமிச்சை பழங்களின் வரத்து குறைந்து உள்ளது. இதனால் அதன் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் நிலையில் எலுமிச்சை பழத்தின் தேவையும் அதிகரித்து அதன் விலை மேலும் உயரும் என்றனர்.
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு இன்று 500-க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறி விற்பனைக்கு குவிந்தன. இதனால் பீன்ஸ், அவரைக்காய், வெண்டைக்காய் ஆகிய காய்கறிகளின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ ரூ.70-க்கு விற்ற பீன்ஸ் விலை வீழ்ச்சி அடைந்து இன்று கிலோ ரூ.20-க்கு விற்கப்படுகிறது. கேரட் கிலோ-ரூ.25, பீட்ரூட்-ரூ.30, அவரைக்காய்-ரூ.10, வரி கத்தரிக்காய்-ரூ.15, வெண்டைக்காய்-ரூ.20 க்கு விற்பனை ஆனது.