பள்ளிகள் திறப்பதால் 1500 சிறப்பு பஸ்கள்: சென்னைக்கு நாளை 26 ஆயிரம் பேர் திரும்புகிறார்கள்
- வெளி மாவட்டங்களில் இருந்து சென்னை திரும்புவதற்கும் நேற்று முன்தினம் முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
- கோயம்பேடு பஸ் நிலைய அருகில் வாகன நெரிசல் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக கூடுதல் போக்குவரத்து போலீசாரை பணியமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து நாளை (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதையொட்டி சென்னையில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்வதற்கும், வெளி மாவட்டங்களில் இருந்து சென்னை திரும்புவதற்கும் நேற்று முன்தினம் முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
9, 10, 11 ஆகிய 3 நாட்களும் 1500 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று தமிழக அரசின் போக்குவரத்து கழகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப் பட்டிருந்தது.
இதையடுத்து கடந்த 2 நாட்களும் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கும், வெளிமாவட்டங்களில் இருந்து சென்னைக்கும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணம் மேற்கொண்டு உள்ளனர்.
நேற்று முன்தினம் (9-ந் தேதி) சென்னையில் இருந்து சுமார் 8500 பேரும், நேற்று 5 ஆயிரம் பேரும் அரசு பஸ்களில் புறப்பட்டு சென்றுள்ளனர்.
இதேபோன்று மற்ற பகுதிகளில் இருந்து சென்னை உள்பட முக்கிய நகரங்களுக்கும் ஏராளமானோர் புறப்பட்டு சென்று உள்ளனர். கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 30 ஆயிரம் பேர் சிறப்பு பஸ்கள் மூலமாக சென்னைக்கு புறப்பட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று மாலையில் சென்னை வருவதற்கு சுமார் 22 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை இன்று மாலைக்குள் மேலும் 4 ஆயிரம் கூடுதலாக உயர்வதற்கு வாய்ப்பு உள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதன்படி இன்று மாலையில் மட்டும் வெளிமாவட்டங்களில் இருந்து சென்னைக்கு 26 ஆயிரம் பேர் பயணம் மேற் கொள்வார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
இவர்கள் நாளை காலையில் சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தை வந்தடைவார்கள். இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பயணிகள் சிரமப்படக் கூடாது என் பதை கருத்தில் கொண்டு சிறப்பு ஏற்பாடுகளை போலீசார் மேற்கொண்டுள்ளனர்.
கோயம்பேடு பஸ் நிலையத்தை சுற்றியுள்ள சாலைகளில் வாகன நெரிசல் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக கூடுதல் போக்குவரத்து போலீசாரை பணியமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சட்டம்-ஒழுங்கு பிரிவு போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.