செய்திகள்

பெண்களிடம் சில்மிஷம், திருட்டை தடுக்க தனியார் பஸ்களில் சி.சி.டி.வி. காமிரா - பயணிகள் வரவேற்பு

Published On 2016-06-06 11:23 IST   |   Update On 2016-06-06 11:23:00 IST
பெண்களிடம் சில்மிஷம், திருட்டை தடுக்க தனியார் பஸ்களில் சி.சி.டி.வி. காமிரா பொருத்தப்பட்டு வருவதற்கு பயணிகளிடையே வரவேற்பு ஏற்பட்டுள்ளது.
வாழப்பாடி:

தமிழகத்தில் பயணிகளை கவரும் வகையில் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு பளபளக்கும் பல வண்ணங்களில் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

வளர்ந்து வரும் அறிவியல் முன்னேற்றத்திற்கேற்ப நெடுந்தொலைவிற்கு இயக்கப்படும் புறநகர் பஸ்களில் மட்டுமின்றி, குறைந்த தூரத்திற்கு இயக்கப்படும் நகர்ப்புற பஸ்களிலும், பயணிகளுக்கு பல்வேறு வசதிகள் ஏற்படுத்தி கொடுப்பதில் பஸ் உரிமையாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மக்கள் அதிகளவில் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துவது அதிகரித்துள்ளதால் சேலத்தில் ஒரு சில தனியார் பஸ்களில் வை-பை இன்டர்நெட் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அதனையடுத்து, பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி தனியார் பஸ்களில் சி.சி.டி.வி. காமிரா பொருத்துவது அதிகரித்துள்ளது.

குறிப்பாக சேலத்தில் இருந்து திருச்செங்கோடு, ஆத்தூர், தர்மபுரி வழித்தடங்களில் இயக்கப்படும் தனியார் பஸ்களில் சி.சி.டி.வி.காமிரா பொருத்தப்பட்டு உள்ளது. இதனால் பஸ்களில் பெண்களிடம் சில்மிஷம் செய்வதும், ஜேப்படி, பிக்பாக்கெட் போன்ற திருட்டும் குறைய வாய்ப்பு உள்ளது. தனியார் பஸ்களில் சி.சி.டி.வி. காமிரா பொருத்தப்பட்டு வருவதற்கு பயணிகளிடையே வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து வாழப்பாடியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் தெரிவித்ததாவது:-

சேலத்தில் இருந்து ஆத்தூர் மற்றும் திருச்செங்கோடு வழித்தடத்தில் இயக்கப்படும் தனியார் பஸ்களில் சி.சி.டி.வி. காமிரா பொருத்தப்பட்டுள்ளது. அதனால் பஸ்சில் பயணிக்கும் பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பெண்களிடம் சில நபர்கள் அத்துமீறி சில்மிஷம் செய்வதும், திருடுவதும் குறையும். நவீன வசதியை பயன்படுத்தி பயணிகள் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்துள்ள தனியார் பஸ்களை வரவேற்கிறோம் என்றார்.

Similar News