செய்திகள்

கே.என். நேரு வழக்கில் 3 மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்: மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2016-06-07 10:22 IST   |   Update On 2016-06-07 10:22:00 IST
முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் போக்குவரத்து அதிகாரிகளுக்கு எதிரான வழக்கில் 3 மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
மதுரை:

முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் போக்குவரத்து அதிகாரிகளுக்கு எதிரான வழக்கில் 3 மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

கடந்த தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் கே.என்.நேரு. இவரது பதவி காலத்தில் போக்குவரத்துக்கழக பொது நிதியை கே.என்.நேருவுக்கு வேண்டியவர்களின் தனிப்பட்ட பயணத்துக்கும், கட்சியினருக்கும் செலவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம், தஞ்சை போக்குவரத்துக்கழக முன்னாள் கேஷியர் புகார் அளித்தார். இது தொடர்பாக கே.என்.நேரு மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, போக்குவரத்துக்கழக அதிகாரிகள் சிலர் மனுத்தாக்கல் செய்தனர்.

அதை விசாரித்த ஐகோர்ட்டு, இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தடை விதித்து உத்தரவிட்டது. பின்னர் அந்த மனுக்கள் 2-2-2016ல் தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்த நிலையில் இந்த வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி கோவிந்தராஜ், மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி தேவதாஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் பாலமுருகன் ஆஜராகி வாதாடினார்.

விசாரணைக்குப் பின்னர் 3 மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு நீதிபதி தேவதாஸ் உத்தரவிட்டார்.

Similar News