கொடைக்கானல் கோடை விழாவுக்கு 3 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை
கொடைக்கானல்:
சுற்றுலா தலமான கொடைக்கானலில் குளு குளு சீசனையொட்டி கோடை விழா கடந்த மாதம் 28–ந் தேதி மலர் கண்காட்சியுடன் தொடங்கியது. 2 தினங்கள் நடைபெற்ற மலர் கண்காட்சியில் ரோஜா உள்பட பல்வேறு வகையான மலர் செடிகள் வைக்கப்பட்டிருந்தன. லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் இதனை கண்டு ரசித்தனர்.
கோடை விழாவில் தொடர்ந்து படகுபோட்டி, வாத்து பிடிக்கும் போட்டி, சைக்கிள் போட்டி, நாய் கண்காட்சி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
கோடை விழாவின் இறுதி நாளான நேற்று கொடைக்கானல் ஏரியில் மீன்பிடிக்கும் போட்டி நடத்தப்பட்டது.
இதில் கொடைக்கானலை சேர்ந்த அருமைநாயகம் என்பவர் 3 கிலோ எடையுள்ள கட்லா மீனை பிடித்து முதலிடம் பெற்றார். சற்குணம் என்பவர் 750 கிராம் மீனை பிடித்து 2–ம் இடத்தையும், பிரபுராஜ் என்பவர் 500 கிராம் எடையுள்ள மீனை பிடித்து 3–ம் இடத்தையும் பிடித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு திண்டுக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் லதா பரிசு வழங்கினார்.
கோடை விழாவையொட்டி கொடைக்கானலுக்கு 2 லட்சத்து 95 ஆயிரத்து 464 சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். இது கடந்த ஆண்டை விட 54 ஆயிரத்து 374 பேர் அதிகம். பிரையண்ட் பூங்காவை 2 லட்சத்து 31 ஆயிரத்து 913 பேர் கண்டு ரசித்துள்ளனர். இவர்கள் மூலம் ரூ.16 லட்சத்து 87 ஆயிரம் வருவாய் கிடைத்துள்ளது.