எல்லை தாண்டினால் சுட்டு வீழ்த்துவோம்: இலங்கை மந்திரியின் பேச்சால் தமிழக மீனவர்கள் கொந்தளிப்பு
ராமேசுவரம்:
இந்திய-இலங்கை கடல் எல்லையான கச்சத்தீவு அருகே மீன் பிடிக்கும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் சில ரேநம் மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டு வருகின்றனர்.
இவ்வாறு சிறைபிடிக்கப்பட்ட 73 தமிழக மீனவர்கள், இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களது படகுகளும் இலங்கை கடற்பகுதியில் கேட்பாரற்று நிற்கின்றன.
இதற்கு முன்பு கைதான மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டபோதிலும் அவர்களது படகுகள் விடுவிக்கப்படாததால் அவையும் இலங்கை கடற்பகுதியிலேயே உள்ளன. இதில் பல படகுகள் கடல் அலைகளால் சேதமாகி மீட்க முடியாத நிலையில் உள்ளது.
இந்த நிலையை கண்டித்தும் இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்யக்கோரியும், ராமேசுவரத்தில் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
இன்று (சனிக்கிழமை) அவர்கள் 2–வது நாளாக போராட்டத்தை தொடர்வதால், படகுகள் கடற்கரையில் அணிவகுத்து நிறுத்தப்பட்டுள்ளன.
26–ந்தேதி ஆர்ப்பாட்டம், 28–ந்தேதி முதல் தொடர் உண்ணாவிரதம் என அவர்கள் அறிவித்துள்ளனர். இலங்கை கடற்பகுதிகளில் சேதமடைந்துள்ள படகுகளின் உரிமையாளர்களுக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதனை ஏற்று மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இலங்கை அரசுக்கு, மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது. இதன் அடிப்படையில் இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 73 பேரும் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என இலங்கை மீன் வளத்துறை அமைச்சகம், தெரிவித்துள்து.
இந்த சூழலில் இலங்கை மீன்வளத்துறை மந்திரி மகிந்தா சமர வீரா தெரிவித்துள்ள கருத்தால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. கைதான மீனவர்கள் மட்டுமே விடுவிக்கப்படுவார்கள். பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை விடுவிக்கும் பேச்சுக்கே இடமில்லை.
எல்லை தாண்டி வரும் தமிழக மீனவர்களை கைது செய்தால் மட்டும் போதாது, அவர்களை சுட்டு வீழ்த்த வேண்டும். அப்போதுதான் எல்லை தாண்டி வரமாட்டார்கள் என்று கூறி உள்ளார்.
அவரது இந்த பேச்சு தமிழக மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து, மீனவர் சங்க தலைவர்கள் சேசு, தேவதாஸ் ஆகியோர் கூறியதாவது:–
பாரம்பரிய கடல் பகுதியில் மீன் பிடிக்க செல்லும்போது தாக்கப்படுவது வேதனையானது. எல்லை தாண்டி வருவதாக தமிழக மீனவர்களை தாக்கி வந்த இலங்கை கடற்படை, கடந்த சில ஆண்டுகளாக கைது நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் பல மாதங்கள் இலங்கை சிறையில் தமிழக மீனவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகுகள், விடுவிக்கப்படாததால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
இந்த வேதனையான கால கட்டத்தில் எல்லை தாண்டி வரும் தமிழக மீன வர்களை சுட்டு வீழ்த்த, இலங்கை கடற்படைக்கு இலங்கை அரசு உத்தரவு போட வேண்டும். அப்படி உத்தரவிட்டால்தான், உயிருக்கு பயந்து தமிழக மீனவர்கள் இங்கு வந்து மீன் பிடிக்க மாட்டார்கள். கைது நடவடிக்கை போதாது என இலங்கை மீன்வளத்துறை மந்திரி மகிந்தா சமர வீரா கூறி இருப்பது வேதனைக் குரியது. அவரது பேச்சு கண்டனத்திற்குரியது.
தமிழக மீனவர்கள் விஷயத்தில், மத்திய அரசு இனியும் மவுனம் சாதிக்கக்கூடாது. மத்தியில் உள்ள பாரதீய ஜனதா அரசு, இலங்கைக்கு சரியான அழுத்தம் கொடுக்க வேண்டும். இதன் மூலம் மீனவர் நலன் காக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதற்கிடையில் மீனவர்கள் போராட்டம் காரணமாக, மீன் ஏற்றுமதி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு உள்ளதாக மீன் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.