செய்திகள்

மதுரையில் நிலம் வாங்கி தருவதாக இன்ஸ்பெக்டர்-16 பேரிடம் ரூ.1¼ கோடி மோசடி: 3 பேர் மீது புகார்

Published On 2016-07-23 14:58 IST   |   Update On 2016-07-23 14:58:00 IST
ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் உள்பட 17 பேரிடம் ரூ.1¼ கோடி மோசடி செய்ததாக ஆசிரியர், அவரது மனைவி மற்றும் மகன் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
மதுரை:

மதுரை காதக்கிணறு ஜாங்கிட் நகரைச் சேர்ந்தவர் நேதாஜி, ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர். இவர் ஓய்வூதியம் தொடர்பாக மதுரை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட கருவூல அலுவலகத்திற்கு அடிக்கடி செல்வது வழக்கம்.

அப்போது கூடல் புதூரைச் சேர்ந்த ஆசிரியர் அமல்ஜோசப், அவரது மனைவி ஜோஸ்பின், மகன் ஆதம் ஜோனஸ் ஆகியோரது அறிமுகம் கிடைத்தது. அப்போது அவர்கள் மாட்டுத் தாவணி அருகே குறைந்த விலைக்கு இடம் இருப்பதாக கூறி உள்ளனர்.

இதனை நம்பிய நேதாஜி, ரூ.37 லட்சத்து 6500-ஐ அமல்ஜோசப் தம்பதியிடம் வழங்கி உள்ளார். இதே போல் மேலும் 16 பேர் ரூ.87 லட்சத்து 25 ஆயிரம் கொடுத்துள்ளனர்.

பணத்தை பெற்றுக் கொண்ட அமல்ஜோசப் தரப்பு, இடம் வாங்கி கொடுக்காமல் இழுத்தடித்துள்ளனர். இதனால் பணத்தை திருப்பி கேட்டபோது அதையும் கொடுக்கவில்லை.

இதுகுறித்து மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீசில் நேதாஜி புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூ.1¼ கோடி மோசடி செய்ததாக ஆசிரியர் அமல் ஜோசப், அவரது மனைவி ஜோஸ்பின், மகன் ஆதம் ஜோனஸ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News