செய்திகள்

சேலம் அருகே மாவோயிஸ்ட்டுகள் பதுங்கலா?: கியூ பிரிவு போலீசார் 2-வது நாளாக தேடுதல் வேட்டை

Published On 2016-07-26 11:12 IST   |   Update On 2016-07-26 11:12:00 IST
சேலம் அருகே மாவோயிஸ்டுகள் பதுங்கி உள்ளார்களா என கியூ பிரிவு போலீசார் 2-வது நாளாக தேடிவருகிறார்கள்.
சேலம்:

தமிழகத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்ற தகவல் கிடைத்ததால் அனைத்து பகுதியிலும் போலீசார் இவர்களை தேடிவருகிறார்கள். இந்த நிலையில் கரூர் அருகே பதுங்கி இருந்த மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் அமைப்பை சேர்ந்த கலா, சந்திரா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் உயர் போலீசாரும், கியூ பிரிவு போலீசாரும் தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் இவர்கள் இருவரும் சிறைகளில் அடைக்கப்பட்டனர்.

கரூரில் கைதான கலா, சந்திராவிடம் விசாரித்ததில் இவர்களுக்கு பல்வேறு பகுதிகளில் ஆதரவாளர்கள் இருப்பதும், இவர்கள் தவிர மேலும் சில மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்றும் ரகசிய தகவல் கிடைத்தது. இவர்களை கைது செய்ய அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.

இதையடுத்து சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் இதையொட்டி உள்ள மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக போலீசார் கண்காணித்து வருகிறார்கள். மாவோயிஸ்டு தீவிரவாதிகளுடன் யார்-யார்? தொடர்பு வைத்து உள்ளனர் என்றும் விசாரித்து இவர்களும் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மட்டும் மாவோயிஸ்ட் அமைப்புகளை சேர்ந்த 19-க்கும் மேற்பட்டோர் சில வருடங்களாக தலைமறைவாக இருந்து வருகிறார்கள். இவர்களில் பலர் ஜாமீனில் வந்து தலைமறைவானவர்கள். இவர்கள் யார்-யார்? என்ற பட்டியலை எடுத்து இவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்களில் 3பேர் சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள். இவர்களில் ஒருவர் பெயர் மணிவாசகம் என்கிற மணி என்கிற சரவணன் என்கிற சந்திரசேகரன் (வயது 53) . இவரை போலீசார் தீவட்டிப்பட்டி பகுதியில் கடந்த 2 நாட்களாக தேடிவருகிறார்கள். ஆனால் அவர் சிக்கவில்லை.

இவரைப்போல் சேலம் அம்மாபேட்டை காலனியை சேர்ந்த கார்த்திக் என்கிற கண்ணன் என்கிற கோபி (வயது 39) என்ற வாலிபரையும், சேலம் வீராணம் பள்ளிக்கூடத்தானூரை சேர்ந்த பழனிவேல் (வயது 36) என்பவரையும் கியூ பிரிவு போலீசார் கடந்த 2 நாட்களாக தேடிவருகிறார்கள். ஆனால் இவர்கள் பல வருடங்களாக ஊர் பக்கம் வருவது இல்லை என்று ஊர் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் சேலம் அருகே உள்ள வீராணம், பள்ளிக்கூடத்தானூர் பகுதிகளில் நேற்று மாலை முதல் விடிய விடிய தேடுதல் வேட்டை நடந்தது. வீடு வீடாக போலீசார் சோதனை நடத்தினார்கள். ஆனால் யாரும் சிக்கவில்லை. இந்த கிராமங்களுக்கு புதிய ஆட்கள் யாரும் வந்து செல்கிறார்களா? என்றும் விசாரணை நடக்கிறது.

மாவோயிஸ்ட் அமைப்பை சேர்ந்த பழனிவேல் கடந்த 2003-ம் ஆண்டில் இருந்து தலைமறைவாக இருந்து வருகிறார். இவர் பள்ளிக் கூடத்தானூரில் நடந்த சம்பவம் ஒன்றில் விசாரணைக்கு செல்லாமல் தலைமறைவானார். பின்னர் அவர் ஊர் திரும்பவில்லை. அப்போது இருந்தே இவரை போலீசார் தேடிவருகிறார்கள். இவருக்கு திருமணம் ஆகவில்லை. கரூரில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சிக்கியதால் பழனிவேல் சேலம் வந்து பதுங்கி இருக்கலாம் என கியூ பிரிவு போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

நேற்று இரவு சேலத்தில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு வாகனங்களும் சோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

Similar News