செய்திகள்

அவதூறு வழக்கு: தேமுதிக முன்னாள் எம்எல்ஏ.க்கள் கோர்ட்டில் ஆஜர்

Published On 2016-07-26 12:26 IST   |   Update On 2016-07-26 12:26:00 IST
ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக தொடர்ந்த வழக்கில் தே.மு.தி.க. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் விழுப்புரம் கோர்ட்டில் இன்று ஆஜரானார்கள்.

விழுப்புரம்:

விழுப்புரத்தில் கடந்த 2012–ம் ஆண்டு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

அப்போது விழாவில் கலந்து கொண்ட விஜயகாந்த் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. வெங்கடேசன் ஆகியோர் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை விமர்சித்து பேசியதாக விழுப்புரம் முதன்மை நீதிமன்றத்தில் அரசு வக்கீல் பொன்சிவா வழக்கு தொடர்ந்தார்.

இதேபோல் 2014–ம் ஆண்டு உளுந்தூர்பேட்டை எறஞ்சியில் நடைபெற்ற தே.மு.தி.க. மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய விஜயகாந்த் அவரது மனைவி பிரேமலதா, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பார்த்தசாரதி, வெங்கடேசன் ஆகியோர் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை விமர்சித்து பேசியதாக விழுப்புரம் முதன்மை கோர்ட்டில் மற்றொரு அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்குகளின் விசாரணை கடந்த 19–ந் தேதி விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது விஜயகாந்த், பிரேமலதா, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பார்த்த சாரதி, வெங்கடேசன் ஆகியோர் ஆஜராக வில்லை.

இதையடுத்து இந்த வழக்கை (இன்று) 26–ந் தேதிக்கு நீதிபதி சரோஜினி தள்ளி வைத்தார். அன்றய தினம் விஜயகாந்த் உள்பட 4 பேரும் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.

அதன்படி இன்று முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பார்த்தசாரதி, வெங்கடேசன் ஆகியோர் கோர்ட்டில் ஆஜ ரானார்கள். விஜயகாந்த், பிரேமலதா ஆஜராகவில்லை.

Similar News