செய்திகள்

தேர்தல் விதிமீறல் வழக்கு: பண்ருட்டி கோர்ட்டில் ராமதாஸ்-நெப்போலியன் ஆஜர் - விசாரணை தள்ளிவைப்பு

Published On 2016-09-06 12:14 IST   |   Update On 2016-09-06 13:55:00 IST
தேர்தல் விதி மீறல் வழக்கு தொடர்பாக பண்ருட்டி கோர்ட்டில் ராமதாஸ்-நெப்போலியன் இன்று ஆஜரானார்கள். வழக்கை விசாரித்த நீதிபதி வருகிற 26-ந் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
பண்ருட்டி:

கடந்த 2011-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின்போது, பண்ருட்டி தொகுதியில் தேர்தல் விதிமுறைகளை மீறி பிரசாரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், நடிகர் நெப்போலியன், சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. உள்பட 7 பேர் மீது பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு பண்ருட்டி 1-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடந்த மாதம் 29-ந் தேதி நடைபெற்ற விசாரணையின்போது பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் ஆஜராகவில்லை. வழக்கை நீதிபதி சரவணபாபு செப்டம்பர் 6-ந் தேதிக்கு (இன்று) ஒத்திவைத்தார். மேலும் அன்றைய தினம் ராமதாஸ், நெப்போலியன் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.

அதன்படி பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், நடிகர் நெப்போலியன், சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. கே.எஸ்.அழகிரி ஆகியோர் இன்று பண்ருட்டி கோர்ட்டில் நீதிபதி சரவண பாபு முன்னிலையில் ஆஜரானார்கள்.

வழக்கை விசாரித்த நீதிபதி சரவணபாபு வருகிற 26-ந் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தார். அன்றைய தினம் அனைவரும் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

ராமதாஸ் ஆஜரானதால் பண்ருட்டி கோர்ட்டு வளாகம் முன்பு பா.ம.க.கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் திரண்டனர். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Similar News