செய்திகள்

கோவை வேளாண் பல்கலைகழகத்துக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிப்பு

Published On 2017-04-04 17:11 IST   |   Update On 2017-04-04 17:11:00 IST
விவசாயிகளுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் கோவை வேளாண் பல்கலைகழகத்துக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை:

டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்துக்கு ஆதரவாக கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்கும் வரை எங்களின் போராட்டம் தொடரும் என மாணவர்கள் கூறி இரவிலும் போராட்டத்தை தொடர்ந்தனர். இதையடுத்து மாணவர்களிடம் பல்கலைக்கழக டீன் மகிமைராஜா, போலீஸ் உதவி கமி‌ஷனர் வெங்கடேசன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் டீன் மகிமைராஜா கூறுகையில், பல்கலைக்கழகத்தில் இளங்கலை படித்து வரும் 8 பிரிவுகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். எனவே முதலாம் ஆண்டு முதல் 3-ம் ஆண்டு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. பல்கலைக் கழகம் திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.

இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் இரவு 8 மணிக்கு தங்களின் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதுகுறித்து மாணவர்கள் கூறும் போது, விவசாயிகளின் கோரிக்கைகள் ஏற்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் பல்கலைக் கழகம் திறந்த பின்னர் மாணவர்களிடம் கலந்து ஆலோசனை செய்த பின்னர் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என்றனர்.

Similar News