செய்திகள்

மெர்சல் பட தியேட்டர் முன்பு முற்றுகை: அர்ஜூன் சம்பத் கைது

Published On 2017-10-29 18:26 IST   |   Update On 2017-10-29 18:26:00 IST
மெர்சல் படத்தில் சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்க கோரி நாகர்கோவில் தியேட்டர் முன்பு முற்றுகை போராட்டம் நடத்திய அர்ஜூன் சம்பத் கைது செய்யப்பட்டார்.
நாகர்கோவில்:

நடிகர் விஜய் நடித்து சமீபத்தில் வெளியாகி உள்ள மெர்சல் படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளாகி உள்ளது. அந்த படத்தில் ஜி.எஸ்.டி. வரிக்கு எதிரான வசனங்கள் இடம்பெற்றுள்ளதற்கு பாரதீய ஜனதா கட்சி கண்டனம் தெரிவித்தது.

இந்த நிலையில் மெர்சல் படத்தில் மத உணர்வுகளை தூண்டும் வகையில் வசனம் இடம் பெற்றுள்ளதாகவும், அந்த காட்சியை நீக்கக்கோரி இன்று தமிழகம் முழுவதும் மெர்சல் படம் ஓடும் தியேட்டர்கள் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் அறிவித்து இருந்தார்.

அதன்படி இன்று நாகர்கோவில் செட்டிக்குளத்தில் மெர்சல் படம் ஓடும் ராஜாஸ் தியேட்டர் முன்பு அர்ஜூன் சம்பத் தலைமையில் இந்து மக்கள் கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தியேட்டர் முன்பு தரையில் அமர்ந்து கோ‌ஷங்களையும் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அனுமதியின்றி இந்த போராட்டம் நடத்தப்பட்டதாக கூறி அர்ஜூன் சம்பத் உள்பட 19 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களை வேனில் ஏற்றி நாகர்கோவில் வடிவீஸ்வரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

முன்னதாக அர்ஜூன் சம்பத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

மெர்சல் படத்தில் உள்ள மத உணர்வை தூண்டும் வசனங்களை நீக்க வேண்டும் என்று இன்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டு உள்ளது. இது தனி மனிதனுக்கு எதிரான போராட்டம் அல்ல. ஜனநாயக அற நெறிப்படி இந்த போராட்டம் நடக்கிறது.

ஏற்கனவே துப்பாக்கி படத்தில் சர்ச்சைக்குரிய வசனம் இடம்பெற்றபோது அந்த வசனத்தை அவர்கள் அகற்றினார்கள். தற்போது மெர்சல் படத்தில் இடம்பெற்றுள்ள மத உணர்வை தூண்டும்படி உள்ள வசனத்தை நீக்க கேட்டு கடிதம் மூலம் கோரிக்கை வைத்தோம். நீக்குவதாக கூறி விட்டதாக அந்த வசனத்தை இதுவரை நீக்கவில்லை. நடிகர் விஜய் ஜோசப் விஜய் என்ற பெயரில் டிவிட்டரில் மெர்சல் பட வெற்றிக்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அவருக்கு இந்து ரசிகர்களும் அதிகமாக உள்ளனர். எனவே அந்த ரசிகர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து சர்ச்சைக்குரிய வசனங்களை நீக்க வேண்டும். மெர்சல் படம் மட்டுமல்ல எங்கள் உணர்வுகளை புண்படுத்தும் எந்த படமாக இருந்தாலும் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News