செய்திகள்

கந்து வட்டி கொடுமையை தடுக்க கடுமையான சட்டம் இயற்ற வேண்டும்: ஜி.கே.வாசன்

Published On 2017-11-01 13:09 IST   |   Update On 2017-11-01 13:09:00 IST
தமிழகத்தில் கந்து வட்டி கொடுமையை தடுக்க கடுமையான சட்டம் இயற்ற வேண்டும் என ஜி.கே.வாசன் கூறினார்.
பண்ருட்டி:

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பண்ருட்டியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு இடங்களில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக சென்னை போன்ற மாநகராட்சிகளிலும், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளிலும் பல்வேறு கிராமங்களிலும் தண்ணீர் தேங்கி மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வீடுகளுக்குள் தண்ணீர் தேங்கி குளமாக நிற்கிறது.

சாலைகள் குண்டும்- குழியுமாக மாறி போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலையாக மாறி உள்ளது. மேலும் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிக அளவு உள்ளது. இந்த நிலையில் மழை பாதிப்பால் சேறு, சாக்கடை, கொசு தொல்லை ஆகியவை ஏற்பட்டுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு சம்பந்தபட்ட அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு பாதிப்புகளை சரி செய்ய வேண்டும். மழை பாதிப்புகளை சரி செய்யும் பணியில் அரசு மெத்தனமாக உள்ளது.

ஆட்சியாளர்களுக்கும், அரசுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது. தமிழக அரசு மக்கள் பிரச்சனையில் முழுமையாக கவனம் செலுத்தி வாக்களித்த மக்களுக்கு கடமை ஆற்ற வேண்டும்.

தமிழகத்தில் கந்து வட்டியால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே கந்து வட்டி கொடுமையை தடுக்க கடுமையான சட்டம் இயற்ற வேண்டும்.

மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் வர்த்தகர்கள் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் தொடர்ந்து நடைபெறும். ஜி.எஸ்.டி. கூட்டங்களில் உண்மை நிலையை உணர்ந்து வரி குறைப்பு செய்ய வேண்டும். உள்ளாட்சிதேர்தல் உடனடியாக நடத்த வேண்டும்

என்.எல்.சி. நிறுவன பங்குகளை தனியாருக்கு விற்க கூடாது. என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும். என்.எல்.சிக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News