செய்திகள்

ஏ.டி.எம்.மில் நிரப்ப கொண்டு சென்ற ரூ. 28 லட்சத்துடன் மாயமான டிரைவர்-3 நண்பர்கள் கைது

Published On 2017-11-01 13:46 IST   |   Update On 2017-11-01 13:46:00 IST
ஏ.டி.எம்.மில் நிரப்ப கொண்டு சென்ற ரூ. 28 லட்சத்துடன் மாயமான டிரைவர் மற்றும் 3 நண்பர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆலந்தூர்:

சென்னை விமான நிலையத்தில் உள்ள கனரா வங்கி ஏ.டி.எம்.மில் பணம் நிரப்புவதற்காக நேற்று முன்தினம் தனியார் நிறுவன ஊழியர்கள் வேனில் வந்தனர். வேனை தூத்துக்குடி மாவட்டம் ஏரலை சேர்ந்த உதய குமார் ஓட்டி வந்தார்.

ஏ.டி.எம்.மில் பணத்தை நிரப்பி விட்டு ஊழியர்கள் வந்தபோது வேனுடன் உதயகுமார் மாயமாகி இருந்தார். வேனில் ரூ. 28 லட்சம் பணம் இருந்தது.

இதற்கிடையே மாயமான வேன் பல்லாவரம் மேம்பாலம் அருகே நிறுத்தப்பட்டு இருந்தது. அதிலிருந்த ரூ. 28 லட்சத்துடன் டிரைவர் உதயகுமார் ஓட்டம் பிடித்து இருப்பது தெரியவந்தது.தலைமறைவான டிரைவர் உதயகுமாரை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது.

உதயகுமாரின் சொந்த ஊரான ஏரலுக்கு ஒரு தனிப்படை போலீசார் சென்றனர். ஆனால் அவர் அங்கு இல்லை. இதனால் இவ்வழக்கில் துப்பு துலங்காமல் இருந்தது.

இதற்கிடையே உதயகுமார் முன்பு வேலை பார்த்த இடங்கள் குறித்து போலீசார் விவரங்களை சேகரித்தனர். அப்போது அவர் போரூர் காட்டுப்பாக்கத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் கார் டிரைவராக வேலை பார்த்ததும் அங்கிருந்து ஒரு காரை எடுத்துச்சென்று தலைமறை வானதும் தெரியவந்தது.

இதையடுத்து உதய குமாரின் நண்பர்கள் குறித்து விசாரித்த போது ஆலப்பாக்கத்தில் தங்கி இருப்பது தெரிந்தது. உடனே போலீசார் அங்கு சென்ற போது உதயகுமார் வீட்டில் பதுங்கி இருந்தார். அவரை பிடித்து கைது செய்தனர்.

மேலும் பணம் கொள்ளைக்கு உடந்தையாக இருந்த அவரது நண்பர்கள் போரூரை சேர்ந்த தேவராஜன், மாங்காட்டை சேர்ந்த பாண்டியன், கோடம்பாக்கத்தை சேர்ந்த கார்த்திகேயன் ஆகியோரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ. 21½ லட்சம், 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

போலீசாரிடம் உதயகுமார் அளித்த வாக்குமூலம் வருமாறு:-

எங்கள் குடும்பத்தில் பணக் கஷ்டம் இருந்தது. இதனால் ஏ.டி.எம்.களுக்கும் கொண்டு செல்லப்படும் பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டேன். இதுபற்றி நண்பர்களிடம் கூறினேன். அவர்களும் கொள்ளைக்கு சம்மதம் தெரிவித்தனர்.

சம்பவத்தன்று பணம் கொண்டு செல்லப்பட்ட வேனை நண்பர்கள் காரில் பின்தொடர்ந்து வந்தனர். விமான நிலைய ஏ.டி.எம்மில் பணம் நிரப்ப ஊழியர்கள் சென்றபோது பாதுகாவலரை திசைதிருப்பி வேனை கடத்தி சென்றேன். அதிலிருந்த ரூ. 28 லட்சத்தை எடுத்துக் கொண்டு நண்பர்கள் வந்த காரில் ஏறி தப்பினோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News