செய்திகள்
கொலை

திருவண்ணாமலை அருகே கள்ளத்தொடர்பை துண்டித்ததால் அண்ணியை கொன்ற வாலிபர்

Published On 2020-03-02 15:40 IST   |   Update On 2020-03-02 15:40:00 IST
திருவண்ணாமலை அருகே கள்ளத்தொடர்பை துண்டித்ததால் கிணற்றில் தள்ளி அண்ணியை கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போளூர்:

திருவண்ணாமலை மாவட்டம் ஜம்னாமரத்தூர் அடுத்த கீழ்விளாமூச்சி கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது45). இவரது மனைவி மின்னல்கொடி (40). தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

அண்ணாமலை சென்னையில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். நேரம் கிடைக்கும் போது ஊருக்கு வந்து செல்வார். 2 குழந்தைகளும் விடுதியில் தங்கி படிக்கின்றனர். இதனால் மின்னல்கொடி (40) வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 27-ந்தேதி அப்பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் மின்னல்கொடி பிணமாக மிதந்தார். அவரது உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து ஜம்னாமரத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். பிரேத பரிசோதனை அறிக்கையில், மின்னல்கொடி கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதனால் தற்கொலை வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.

அண்ணாமலையின் தம்பி சவுந்தரராஜன் (30) என்பவருக்கும் மின்னல்கொடிக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சவுந்தரராஜனுக்கும், அவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு நடந்தது.

இதில் ஆத்திரமடைந்த சவுந்திரராஜனின் மனைவி, கணவருடனான தொடர்பை துண்டித்துக் கொள்ளும்படி மின்னல்கொடியை எச்சரித்துள்ளார். இதனால் அவமானம் அடைந்த மின்னல்கொடி கடந்த 6 மாதங்களாக கொழுந்தனுடனான ரகசிய தொடர்பை துண்டித்து கொண்டார்.

இதனால் வேதனையின் உச்சிக்கே சென்ற சவுந்தரராஜன், அடிக்கடி அண்ணி மின்னல்கொடியை சந்தித்து தனது ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தியுள்ளார். மின்னல்கொடி மறுத்து வந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சவுந்திரராஜன் மின்னல்கொடியை தீர்த்து கட்டுவது என முடிவு செய்தார். சவுந்தரராஜன் தனது உறவினர் ஒருவரை துணைக்கு அழைத்துக் கொண்டார்.

அதன்படி, கடந்த 25-ந்தேதி இரவு 8 மணிக்கு கீழ்விளாமூச்சியில் நிலத்தின் அருகில் தனது உறவினருடன் சவுந்தரராஜன் காத்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மின்னல்கொடியை மடக்கி தனது ஆசைக்கு இணங்குமாறு அழைத்தார்.

அதற்கு அவர் மீண்டும் மறுப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த சவுந்தரராஜன், மின்னல்கொடியின் முதுகில் கல்லை கட்டி கிணற்றில் தள்ளி மின்னல்கொடியை கொலை செய்தார்.

இதையடுத்து சவுந்திரராஜனை போலீசார் கைது செய்தனர். சவுந்தரராஜனுக்கு உடந்தையாக செயல்பட்ட உறவினர் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த கொலை சம்பவம் ஜவ்வாதுமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News