செய்திகள்
கோப்புப்படம்

கொரோனா பரிசோதனை செய்பவர்களின் செல்போனுக்கு ஒரே நாளில் முடிவு அனுப்ப ஏற்பாடு

Published On 2020-08-13 15:28 IST   |   Update On 2020-08-13 15:28:00 IST
கொரோனா பரிசோதனை செய்பவர்களின் செல்போனுக்கு ஒரே நாளில் முடிவு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக சேலம் அரசு ஆஸ்பத்திரி டீன் பாலாஜிநாதன் தெரிவித்தார்.
சேலம்:

சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. மாவட்டத்தில் 1 லட்சத்து 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் பரிசோதனை முடிவில் கொரோனா தொற்று இல்லாத சிலருக்கு கொரோனா தொற்று இருப்பதாகவும், காலதாமதமாக சிலருக்கு தொற்று இருப்பதாக தெரிவிப்பதால் குளறுபடிகள் நடப்பதாக புகார் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த குளறுபடிகளை தவிர்க்க சேலம் அரசு ஆஸ்பத்திரியில் புதிதாக இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதாவது, இந்த இணையதளம் மூலம் கொரோனா பரிசோதனை செய்து கொள்பவர்களின் செல்போன் எண்ணுக்கு அதன் முடிவுகள் தெரிவிக்கும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சேலம் அரசு ஆஸ்பத்திரி டீன் பாலாஜிநாதன் கூறியதாவது:-

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மட்டும் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2,500-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்றுள்ளனர். இவர்களில் 1,800-க்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் தினமும் 1,700-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் உள்ள ஆய்வகத்தில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

இதில் சில முடிவுகள் அறிவிக்கும் போது தவறுகள் நடைபெறுகிறது. மேலும் சிலர் தவறான செல்போன் எண் கொடுப்பதாலும், அல்லது ஒரே செல்போன் எண்ணை குடும்பத்தில் உள்ள அனைவரும் கொடுப்பதாலும் மற்றும் தவறான முகவரி கொடுப்பதாலும் தவறுகள் நடக்க வாய்ப்பிருக்கிறது.

இந்த தவறுகளை களையும் வகையில் புதிய இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா பரிசோதனை செய்பவர்கள் அனைவரும் தங்கள் பயன்பாட்டில் உள்ள செல்போன் எண் மற்றும் முகவரிகளை சரியாக கொடுக்க வேண்டும். அதன்மூலம் கொரோனா முடிவுகள் அன்றைய தினமே அவர்களுடைய செல்போன் எண்ணுக்கு அனுப்பும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த இணையதள வசதியை விரைவில் மாவட்ட கலெக்டரால் அறிமுகப்படுத்த உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News