செய்திகள்
பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயில்

பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் நிரம்பி வழிந்த பயணிகள் கூட்டம்

Published On 2020-09-08 09:16 IST   |   Update On 2020-09-08 09:16:00 IST
5 மாதங்களுக்குப் பிறகு மதுரையில் இருந்து இயக்கப்பட்ட முதல் நாளிலேயே பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
மதுரை:

கொரோனா ஊரடங்கால் கடந்த மார்ச் மாதம் இறுதி வாரத்தில் இருந்து பொது போக்குவரத்து தடைசெய்யப்பட்டது. இதனால், பஸ், ரெயில்கள் இயக்கப்படவில்லை. ஆனால், பயணிகளுக்காக சிறப்பு ரெயில்கள் மட்டும் அந்தந்த மாநிலங்களுக்குள் இயக்கப்பட்டு வந்தன. அதேபோல, மருந்து மற்றும் உணவுப்பொருட்களுக்காக சிறப்பு பார்சல் ரெயில்களும் இயக்கப்பட்டன. இதற்கிடையே, தமிழக அரசு ரெயில் போக்குவரத்தை நிறுத்தி வைக்குமாறு வலியுறுத்தியதன் பேரில், பயணிகளுக்கான சிறப்பு ரெயில் சேவை மட்டும் ரத்து செய்யப்பட்டது.

இந்தநிலையில், தமிழகத்தில் மாநிலங்களுக்குள்ளான ரெயில்சேவை 5 மாதங்களுக்குப் பிறகு நேற்று தொடங்கியது. அதன்படி மதுரை கோட்டத்தில் மதுரை-சென்னை வைகை எக்ஸ்பிரஸ், காரைக்குடி-சென்னை பல்லவன் எக்ஸ்பிரஸ், மதுரை-சென்னை பாண்டியன் எக்ஸ்பிரஸ், தூத்துக்குடி-சென்னை முத்துநகர் எக்ஸ்பிரஸ், திருச்சி-நாகர்கோவில் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள் நேற்று இயக்கப்பட்டன.

இதற்காக முன்பதிவு டிக்கெட்டுகள் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே ரெயிலில் பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. மதுரை-சென்னை பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயிலில், பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிந்தது. அனைத்து இருக்கைகளிலும் பயணிகளுக்கு இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், ரெயில் புறப்படுவதற்கு சுமார் 1½ மணி நேரம் முன்னதாக ரெயில் நிலையத்துக்கு வருமாறு பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரெயில் நிலையத்தில் நுழைவுவாயிலில் கிருமிநாசினி திரவம் வைக்கப்பட்டுள்ளது.

பின்னர், பயணிகளுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை நடத்தப்படுகிறது. அதனை தொடர்ந்து பயணிகள் பிளாட்பாரங்களுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். முதியவர்கள், உடல் ஊனமுற்றவர்கள் ஆகிய பயணிகளுடன் உதவிக்கு வரும் ஒரேயொரு நபர் மட்டும் ரெயில் நிலையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். இந்த பணிகளை டிக்கெட் பரிசோதகர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

ரெயில் நிலையத்திற்குள் நுழைந்தவுடன் அங்கு வைக்கப்பட்டுள்ள தானியங்கி எந்திரத்தில் பயணிகள் தங்களது டிக்கெட்டை காண்பிக்க வேண்டும். அந்த டிக்கெட்டை டிக்கெட் பரிசோதகர்கள் சரிபார்த்து கொள்வர். இதனால், ஒரு ரெயிலுக்கு 4 டிக்கெட் பரிசோதகர்கள் மட்டும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மதுரையில் உள்ள டிக்கெட் பரிசோதகர்களில் பணியாற்ற விருப்பம் உள்ளவர்களுக்கு மட்டுமே பணி ஒதுக்கப்படுகிறது. ஆனால், பாதிக்கும் மேற்பட்டோர் பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளதால், அனைத்து ரெயில்களிலும் டிக்கெட் பரிசோதகர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வைகை, பாண்டியன் மற்றும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் மட்டும் மதுரையை சேர்ந்த டிக்கெட் பரிசோதகர்கள் சென்னை வரை பணியாற்ற வேண்டும். ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை ரெயில்வே பாதுகாப்பு படை கமிஷனர் வி.ஜே.பி. அன்பரசு உத்தரவின் பேரில், பாதுகாப்பு படை போலீசாரும், ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி தலைமையில் தமிழக ரெயில்வே போலீசாரும் மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News