சென்னையில் மீண்டும் அத்துமீறி சாலையில் நடமாடும் மாடுகள்- 2 வாரத்தில் 284 மாடுகள் பிடிபட்டன
- சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்க 15 மண்டலங்களிலும் அதிகாரிகள் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
- மாடு பிடிபட்ட 3 நாட்களுக்குள் உரிமையாளர் வரவில்லை என்றால் அடுத்தடுத்து ஒவ்வொரு நாளுக்கும் ரூ.200 வீதம் கூடுதலாக அபராதம் விதிக்கப்படும்.
சென்னை:
சென்னையில் பிரதான சாலைகள் மற்றும் தெருக்களில் மாடுகள் சர்வ சாதாரணமாக வலம் வருகின்றன. மாடுகளின் கொம்புகளில் இருசக்கர வாகனத்தின் முகப்பு பகுதி உரசி விபத்துக்குள்ளாகின்றனர்.
கடந்த வாரம் அரும்பாக்கத்தில் சாலையில் தாயுடன் நடந்து சென்ற பள்ளி சிறுமியை மாடு முட்டி தூக்கி வீசியதில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். சமூக வலைதளத்தில் இந்த காட்சி பரபரப்பாக வைரலாகி பொதுமக்களை பதற வைத்தது.
இதையடுத்து மாட்டின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் மாடுகள் வளர்ப்பவர்கள் அதனை சாலைகளில் விடாமல் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என மாநகராட்சி எச்சரித்தது. பொதுமக்களுக்கு இடையூறு செய்தால் போலீஸ் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என கமிஷனர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்க 15 மண்டலங்களிலும் அதிகாரிகள் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். ரோட்டில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து மாநகராட்சி அலுவலகத்திற்கு கொண்டு சென்று அபராதம் விதிக்கப்படுகிறது. முதலில் பிடிபட்டால் ரூ.2000 அபராதம் விதிக்கப்படும். அடுத்தடுத்து 3 முறை பிடிபட்டால் புளு கிராசிடம் ஒப்படைக்கப்படும்.
மாடு பிடிபட்ட 3 நாட்களுக்குள் உரிமையாளர் வரவில்லை என்றால் அடுத்தடுத்து ஒவ்வொரு நாளுக்கும் ரூ.200 வீதம் கூடுதலாக அபராதம் விதிக்கப்படும். இதுபற்றி மாநகராட்சி கால்நடை மருத்துவர் கூறும்போது, 'சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து அபராதம் விதித்து வருகிறோம். 2 வாரத்தில் 284 மாடுகள் பிடிபட்டன. பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் மாட்டின் உரிமையாளர் விவரங்களை போலீசாரிடம் தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் எச்சரித்து அனுப்புவதோடு தொடர்ந்து கண்காணித்து வருவார்கள் என்றார்.
மாநகராட்சி நடவடிக்கை தீவிரமாக இருந்தாலும் சென்னையில் பல இடங்களில் மாடுகள் சுற்றித் திரிகின்றன. கிராமப் புறங்களில் திரிவது போல நகரத்தில் மாடுகள் கட்ட விழ்க்கப்பட்டு சாலையில் விடப்படுவதால் வாகன ஓட்டிகள், நடந்து செல்பவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். சூளைமேடு பகுதியில் பள்ளிக்கு செல்லும் நேரத்தில் சாலையில் மாடுகள் சுற்றித் திரிகின்றன.
அத்துமீறும் மாடுகளின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். மாடுகள் மேய்வதற்கு நகரப் பகுதியில் இடம் குறைவு. மாடு வளர்ப்பவர்கள் பொறுப்பு இல்லாமல் மாடுகளை அவிழ்த்து விட்டு விடுகின்றனர். அவர்களின் அலட்சியத்தால் அசம்பாவிதங்கள் நேர்ந்து விடுகிறது.
விதிகளை மீறி சுற்றித்திரியும் மாடுகளுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை அதிகரிக்க வேண்டும். விபத்தை ஏற்படுத்திய அதன் உரிமையாளர் மீது குற்ற வழக்கு பதிவு செய்தால்தான் மாடுகளை கட்டுப்படுத்த முடியும். சட்டங்களும், விதிகளும் கடுமையானால் தான் உரிமையாளர்களுக்கு பொறுப்பு வரும். அதுவரையில் மாடுகள் சுற்றித் திரிவதை கட்டுப்படுத்த முடியாது என்று தெரிவிக்கின்றனர்.