ஐஸ்அவுஸ் பகுதியில் ஒரே நாளில் 30 மாடுகள் பிடிபட்டன- உரிமையாளர்கள் மீது போலீஸ் வழக்கு
- மாநகராட்சி ஊழியர்கள் ரோட்டில் திரியும் மாடுகளை பிடித்து சென்று தங்களது கட்டுப்பாட்டில் வைத்து அபராதமும் விதித்து வருகிறார்கள்.
- ரோட்டில் திரியும் மாடுகள் கட்டுப்படுத்தப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
சென்னை:
சென்னை மாநகரில் சாலையில் மாடுகள் சுற்றி திரிவதை தடுப்பதற்காக போலீசாரும், மாநகராட்சி அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். குறிப்பாக மாநகராட்சி ஊழியர்கள் ரோட்டில் திரியும் மாடுகளை பிடித்து சென்று தங்களது கட்டுப்பாட்டில் வைத்து அபராதமும் விதித்து வருகிறார்கள். இருப்பினும் மாடுகள் ரோட்டில் நடமாடுவதை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. இதன் காரணமாகவே ஐஸ்அவுஸ் பகுதியில் முதியவரை மாடு முட்டி தள்ளிய சம்பவம் நடைபெற்று உள்ளது. அதே பகுதியில் ஏற்கனவே போலீஸ்காரர் உள்பட 6 பேரை கடந்த சில நாட்களுக்கு முன்பு மாடு முட்டி தள்ளியது. நங்கநல்லூர் பகுதியிலும் இதே போன்று 3 பேரை மாடு முட்டு தள்ளிய சம்பவமும் நடை பெற்று உள்ளது. இந்த சம்பவங்களில் போலீசாரும் மாநகராட்சி அதிகாரிகளும் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வந்துள்ளனர். ஐஸ்அவுஸ் பகுதியில் முதியவரை மாடு முட்டிய சம்பவத்துக்கு பிறகு அந்த பகுதியில் போலீஸ் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மாநகராட்சி அதிகாரிகளும் ரோந்து சென்று ரோட்டில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடித்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 30 மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளன. மாடுகளின் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப பட்டு விசாரணை நடை பெற்று வருகிறது.
இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, சென்னையில் மாடுகளை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கைகள் தொடரும் என்று தெரிவித்தனர். இதன் மூலம் ரோட்டில் திரியும் மாடுகள் கட்டுப்படுத்தப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.