தமிழ்நாடு

2582 காலி இடங்களுக்கு தமிழகம் முழுவதும் இன்று ஆசிரியர் பணிக்கான எழுத்துத்தேர்வு- 41 ஆயிரம் பேர் எழுதினார்கள்

Published On 2024-02-04 16:27 IST   |   Update On 2024-02-04 16:27:00 IST
  • போட்டித் தேர்வை தமிழ்நாடு ஆசிரியா் தோ்வு வாரியம் நடத்தி வருகிறது.
  • ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2-ல் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

சென்னை:

தமிழ்நாட்டில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் வகுப்பு எடுத்து வருகின்றனர். இவர்கள் போட்டித் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த போட்டித் தேர்வை தமிழ்நாடு ஆசிரியா் தோ்வு வாரியம் நடத்தி வருகிறது.

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், அரசு நடுநிலைப் பள்ளிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,222 பட்டதாரி ஆசிரியர் பணி யிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த அக்டோபர் மாதம் வெளியிட்டது. இதையடுத்து இந்த தேர்வை எழுத ஏராளமானோர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து வந்தனர். இதற்கிடையே, காலி பணியிடங்களின் எண்ணிக்கையை 2,582 ஆக உயா்த்தி ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது.

இந்நிலையில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் இன்று நடந்தது. தமிழகம் முழுவதும் உள்ள 130 மையங்களில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வை தமிழகம் முழுவதும் 41 ஆயி ரத்து 485 பேர் எழுதினார்கள்.

சென்னையிலும் இந்த தேர்வை எழுதுவதற்காக பல இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இதையடுத்து சென்னையிலும் ஏராளமானோர் தேர்வை எழுதினார்கள். ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2-ல் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

இந்த தேர்வை எழுது பவர்கள் காலை 8.30 மணிக்கு தோ்வு மையத்துக்கு வந்தனர். அவர்கள் கடும் சோதனைக்கு பிறகு காலை 9.30 மணிக்குள் தோ்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை இயக்குநா்கள், இணை இயக்குநா்கள் நியமனம் செய்யப்பட்டு தோ்வு மையங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா். தோ்வு மையத்துக்குள் அச்சிடப்பட்ட அல்லது கையால் எழுதப்பட்ட தாள்கள், செல்போன், டேப்லட், லேப்டாப், கால்கு லேட்டர் போன்ற எந்த பொருட்களையும் அனுமதிக்கவில்லை. தேர்வு நடைபெறும் அனைத்து அறைகளிலும் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டு, ஆசிரியா் தோ்வு வாரியத்தின் அலுவலகத்தில் இருந்து கண்காணிக்கப்பட்டது.

Tags:    

Similar News