தமிழ்நாடு

குஷ்புவை விமர்சித்து பேசியவர் தி.மு.க.வில் மீண்டும் சேர்க்கப்பட்டார்

Published On 2024-02-11 03:53 GMT   |   Update On 2024-02-11 03:53 GMT
  • சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கொடுங்கையூர் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
  • தனது தவறுக்கு வருந்துவதாகவும், மீண்டும் கழகப் பணியாற்றிட அனுமதி அளிக்கும்படி கூறி கேட்டிருந்தார்.

சென்னை:

தி.மு.க. தலைமைக் கழக பேச்சாளராக செயல்பட்டு வந்தவர் சிவாஜி கிருஷ்ண மூர்த்தி.

இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி குறித்தும், நடிகையும், பா.ஜ.க நிர்வாகியுமான குஷ்பு குறித்தும் தகாத வார்த்தைகளில் பேசி இருந்தார்.

அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டது. அதுமட்டுமின்றி கடும் விமர்சனத்துக்கும் உள்ளானது.

இதைத்தொடர்ந்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கொடுங்கையூர் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அதனை தொடர்ந்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் டிஸ்மிஸ் செய்து பொதுச் செயலாளர் துரை முருகன் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் ஜெயிலில் இருந்து வெளியே வந்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து மீண்டும் கட்சியில் சேர்க்குமாறு தி.மு.க. தலைமைக்கு கடிதம் கொடுத்தார். அதில் தனது தவறுக்கு வருந்துவதாகவும், மீண்டும் கழகப் பணியாற்றிட அனுமதி அளிக்கும்படி கூறி கேட்டிருந்தார்.

அதை ஏற்று அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் கழக உறுப்பினராக செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Tags:    

Similar News