உடுமலை-மூணாறு சாலையில் சுற்றி திரியும் ஒற்றை யானை: வாகன ஓட்டிகள் அச்சம்
- கோடை காலத்தில் யானைகள் இடம் பெயர்வது அதிக அளவில் இருக்கும்.
- ஒற்றை யானை கோபமாக இருக்கும் என்பதால் வாகன ஓட்டிகள் தொந்தரவு செய்யக்கூடாது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து மூணாறு செல்லும் சாலையில் அமராவதி ஒன்பதாறு சோதனை சாவடியில் இருந்து சின்னாறு வரை சாலையின் இருபுறமும் அமராவதி- உடுமலை வனச்சரகங்கள் உள்ளன. இங்கு ஏராளமான யானைகள், மான்கள், காட்டெருமைகள், சிறுத்தைகள், கரடிகள் உள்ளன. உடுமலை வனச்சரகத்தில் இருந்து அவ்வப்போது யானைகள் தண்ணீர் குடிப்பதற்காக மூணாறு சாலையை கடந்து அமராவதி அணைக்கு செல்வது வழக்கம். கோடை காலத்தில் யானைகள் இடம் பெயர்வது அதிக அளவில் இருக்கும்.
மழைக்காலங்களில் வனத்திலேயே குளம் குட்டைகளில் தண்ணீர் கிடைப்பதால் யானைகள் சாலையை கடந்து செல்வது குறைவாக இருக்கும். பெரும்பாலும் ஒன்பதாறு - சின்னார் சோதனை சாவடிக்கு இடையில் உள்ள 13 கிலோமீட்டர் தூரத்தில் ஏழுமலையான் கோவில் பிரிவு, காமனூத்துப்பள்ளம், புங்கனோடை ஆகியவை யானைகள் இடம்பெயரும் முக்கிய வழித்தடமாக உள்ளன.
மேலும் யானைகள் செல்லும்போது சாலையில் சிறிது நேரம் நின்று செல்கின்றன. தற்போது மழை பொழிவு குறைவு காரணமாக வனத்தில் நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் அதிக அளவில் யானைகள் உடுமலை- மூணாறு சாலையை கடந்து செல்ல தொடங்கி உள்ளன.
மேலும் கடந்த சில நாட்களாக ஒற்றை யானை ஏழுமலையான் கோவில் பகுதி சாலையில் சுற்றி திரிகிறது. ஒற்றை யானை கோபமாக இருக்கும் என்பதால் வாகன ஓட்டிகள் தொந்தரவு செய்யக்கூடாது. ஒலி எழுப்பக் கூடாது ,வாகனத்தில் இருந்து இறங்கி செல்பி எடுக்கக் கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.