தமிழ்நாடு

ஆடி மாத விசேஷம்- முதியோருக்கு இலவச பயணம்.. தமிழக அரசின் புது திட்டம்

Published On 2024-07-02 04:16 GMT   |   Update On 2024-07-02 04:16 GMT
  • மூத்த குடிமக்கள் இந்து மதத்தை சார்ந்தவராகவும், 60 வயது முதல் 70 வயதிற்குட்பட்டவர்களாகவும் இருத்தல் வேண்டும்.
  • திருக்கருகாவூர் கர்ப்பக ரட்சாம்பிகை கோவில், பட்டீஸ்வரம் துர்கையம்மன் கோவில் ஆகிய கோவில்களுக்கு ஒரு பயணத்திட்டம்.

சென்னை:

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

2024-2025-ம் நிதியாண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின்போது வெளியிடப்பட்ட அறிவிப்பில், "ஆடி மாதத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களுக்கும், புரட்டாசி மாதத்தில் பிரசித்தி பெற்ற வைணவ கோவில்களுக்கும் வயது மூப்பின் காரணமாகவும், பொருளாதார வசதியின்மை காரணமாகவும், இறை தரிசனம் கிடைக்க இயலாத 60 வயது முதல் 70 வயதிற்கு உட்பட்ட, தலா 1,000 பக்தர்கள் அழைத்து செல்லப்படுவர்.

இதற்கான செலவினத்தொகை ரூ.50 லட்சம் அரசு நிதியாக வழங்கப்படும்" என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில், சென்னை, தஞ்சாவூர், கோயம்புத்தூர், திருச்சி, மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய மண்டலங்களை தலைமையிடமாக கொண்டு புகழ்பெற்ற அம்மன் கோவில்களுக்கு ஆடி மாதத்தில் 1,000 மூத்த குடிமக்கள் கட்டணமின்றி ஆன்மிகப் பயணமாக அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.

சென்னை மண்டலத்தில் மயிலாப்பூர் கற்பகாம்பாள் கோவில், பாரிமுனை காளிகாம்பாள் கோவில், திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில், மாங்காடு காமாட்சியம்மன் கோவில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில் ஆகிய கோவில்களுக்கு ஒரு பயணத்திட்டம்,

தஞ்சாவூர் மண்டலத்தில் தஞ்சாவூர் பெரியகோயில், வராகியம்மன் கோவில், தஞ்சாவூர் பங்காரு காமாட்சியம்மன் கோவில், புன்னைநல்லூர் மகா மாரியம்மன் கோவில் , திருக்கருகாவூர் கர்ப்பக ரட்சாம்பிகை கோவில், பட்டீஸ்வரம் துர்கையம்மன் கோவில் ஆகிய கோவில்களுக்கு ஒரு பயணத்திட்டம்,

கோயம்புத்தூர் மண்டலத்தில் கோயமுத்தூர் கோனியம்மன் கோவில், பொள்ளாச்சி மாரியம்மன், அங்காளம்மன் கோவில், ஆனைமலை மாசாணியம்மன் கோவில், சூலக்கல் சூலக்கல் மாரியம்மன் கோவில், கோயமுத்தூர், தண்டுமாரியம்மன் கோவில் ஆகிய கோவில்களுக்கு ஒரு பயணத்திட்டம்,

திருச்சி மண்டலத்தில் உறையூர் வெக்காளியம்மன் கோவில், உறையூர் கமலவள்ளி நாச்சியார் கோவில், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், சமயபுரம் உஜ்ஜையினி மாகாளியம்மன் கோவில் ஆகிய கோவில்களுக்கு ஒரு பயணத்திட்டம்,

மதுரை மண்டலத்தில் மதுரை மீனாட்சியம்மன் கோவில், வண்டியூர் மாரியம்மன் கோவில், மடப்புரம் காளியம்மன் கோவில், அழகர்கோவில், ராக்காயியம்மன் கோவில், சோழவந்தான், ஜனகை மாரியம்மன் கோவில் ஆகிய கோவில்ளுக்கு ஒரு பயணத்திட்டம்,

திருநெல்வேலி மண்டலத்தில் கன்னியாகுமரி, பகவதியம்மன் கோவில், முப்பந்தல், இசக்கியம்மன் கோவில், சுசீந்திரம் ஒன்னு விட்ட நங்கையம்மன் கோவில், மண்டைக்காடு பகவதிஅம்மன் கோவில், குழித்துறை சாமுண்டியம்மன் கோவில் ஆகிய கோவில்களுக்கு ஒரு பயணத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

ஆடி மாத அம்மன் கோவில்களுக்கான ஆன்மிகப் பயணம் நான்கு கட்டங்களாக, அதாவது ஜூலை 19, 26 ஆகஸ்டு 2, 9 ஆகிய நாட்களில் அந்தந்த மண்டலங்களில் தொடங்கப்பட உள்ளன. இந்த ஆன்மீக பயணத்தில் பங்கேற்க விரும்பும் மூத்த குடிமக்கள் இந்து மதத்தை சார்ந்தவராகவும், 60 வயது முதல் 70 வயதிற்குட்பட்டவர்களாகவும் இருத்தல் வேண்டும்.

இதற்கான விண்ணப்பங்களை இந்து சமய அறநிலையத்துறையின் இணைய தளமான www.hrce.tn.gov.in-லிருந்து பதிவிறக்கம் செய்தோ அல்லது சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் நேரில் பெற்றோ விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்களுடன் இணைத்து 17.7.2024-க்குள் சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் ஒப்படைத்திட வேண்டும்.

மேலும், இது தொடர்பான விபரங்களுக்கு இந்து சமய அறநிலையத்துறையின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 4253 1111, சென்னை மண்டலத்திற்கு 99417020754, 044-29520937, தஞ்சாவூர் மண்டலத்திற்கு 0436-2238114, கோயம்புத்தூர் மண்டலத்திற்கு 0422-2244335, திருச்சி மண்ட லத்திற்கு 0431-2232334, மதுரை மண்டலத்திற்கு 0452-2346445, திருநெல்வேலி மண்டலத்திற்கு 0462-2572783 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். ஆகவே, ஆடி மாத அம்மன் கோவில் ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்க விரும்பும் மூத்த குடிமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு இறை தரிசனம் பெறலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News