தமிழ்நாடு

ஆதிகருவண்ணராயர் கோவில் மாசி மக திருவிழாவில் கட்டுப்பாடுகள் விதிப்பு

Published On 2024-02-19 04:29 GMT   |   Update On 2024-02-19 04:29 GMT
  • கோவிலுக்கு வரும் பக்தர்கள் போதை தரும் பொருட்கள் எதையும் எடுத்து செல்லக்கூடாது.
  • அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் வாகனங்களை நிறுத்த வேண்டும்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம் கெஜஹட்டியில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஆதி கருவண்ணராயர் பொம்ம தேவர் திருக்கோவில் உள்ளது. இந்த கோவிலின் மாசி மக பொங்கல் திருவிழா வரும் 23, 24, 25-ந் தேதிகளில் நடைபெற உள்ளது.

ஆண்டுதோறும் நடைபெறும் இவ்விழாவில் அதிக அளவில் பக்தர்கள் நூற்றுக்கணக்கான வாகனங்களில் வருவதால் வனப்பகுதியில் சூழல் மிகுந்த பாதிப்புள்ளாகிறது. எனவே இந்த விழா தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய ஒழுங்கு முறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என கடந்த 2.1.2024 அன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி கோவிலுக்கு வரும் பக்தர்கள் போதை தரும் பொருட்கள் எதையும் எடுத்து செல்லக்கூடாது. வனம் மற்றும் வன விலங்குகளுக்கு பாதிப்புகள் ஏற்படாதவாறு திருவிழாவை நடத்த வேண்டும்.

அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் வாகனங்களை நிறுத்த வேண்டும். எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் மற்றும் பாலித்தீன் பொருட்களை வனப்பகுதிக்குள் கொண்டு செல்லக்கூடாது.

பாதுகாப்பு முன் எச்சரிக்கையாக மோயார் ஆறு மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என்பன உள்ளிட்ட 20 வகையான நிபந்தனைகள் குறிப்பிட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவுகளை செயல்படுத்துவது தொடர்பாக அரசு துறையினர், கோவில் நிர்வாகித்தினர் மற்றும் சமூகப் பிரதிநிதிகள் என அனைத்து தரப்பினர் உடனான ஆலோசனைக் கூட்டம் சத்தியமங்கலம் தாசில்தார் அலுவலகத்தில், கோபி கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்றது.

இதில் வனத்துறை, வருவாய் துறை, காவல் துறை, இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள், பக்தர்கள், சங்க பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். அனைத்து தரப்பு கருத்துகளும் கேட்கப்பட்டு நீதிமன்ற உத்தரவுகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

அப்போது திருவிழாவின்போது நெகிழிப் பொருட்கள், கண்ணடி பொருட்கள், தீ மூட்டக்கூடிய பொருட்கள், ஆயுதங்கள் போதைப் பொருட்கள், வெடிப்பொருட்கள், சத்தம் எழுப்பக்கூடிய கருவிகள், வளர்ப்பு பிராணிகள் போன்றவற்றை கொண்டு வர அனுமதி இல்லை. மேலும் இந்த திருவிழாவை முன்னிட்டு அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே பக்தர்கள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.

மேற்படி திருவிழாவுக்கு வருகை தரும் பக்தர்கள் கோவில் சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் ஆகியோர் நீதிமன்ற தீர்ப்பின்படி திருவிழாவை சிறப்பாக நடத்தவும், வனப்பகுதியை மாசு இன்றி தூய்மையாக வைத்துக்கொள்ள ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் சத்தியமங்கலம் வனக்கோட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பாக துணை இயக்குனர் சுதாகர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags:    

Similar News