அண்ணாமலை 3-ம் கட்ட நடைபயணம் தொடங்கினார்- மத்திய மந்திரிகள் பியூஷ் கோயல்-எல்.முருகன் பங்கேற்பு
- மெட்ரோ பள்ளியில் தொடங்கும் பயணம் மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் மாலை 6.30 மணிக்கு முடிவடைகிறது.
- அண்ணாமலை நடை பயணத்தையொட்டி அவினாசியில் பா.ஜ.க.,கொடி, தோரணங்களுடன் தொண்டர்கள் உற்சாக நடனமாடினர்.
அவினாசி:
தமிழக பா.ஜ.க., தலைவர் அண்ணாமலை பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டும், மத்திய பா.ஜ.க., அரசின் 9 ஆண்டு கால சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்லவும் 'என் மண், என் மக்கள்' என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.
இதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் மக்களை நேரடியாக சந்தித்து வருகிறார். கடந்த ஜூலை மாதம் 28-ந்தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராமேசுவரத்தில் அண்ணாமலையின் முதல் கட்ட நடைபயணத்தை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லையில் நடை பயணத்தை அண்ணாமலை மேற்கொண்டார். தனது 2-ம் கட்ட நடைபயணத்தை செப்டம்பர் 3-ந்தேதி தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் தொடங்கி னார். தேனி, திண்டுக்கல், நீலகிரியில் நடைபயணம் மேற்கொண்டு, கோவையில் தனது 2-ம் கட்ட நடை பயணத்தை செப்டம்பர் 27-ந்தேதி நிறைவு செய்தார்.
2 கட்ட நடைபயணத்தை முடித்த அவர் 3-ம் கட்ட நடைபயணத்தை கடந்த 6-ந்தேதி மேட்டுப்பாளையத்தில் தொடங்க இருந்தார். ஆனால் மிலாடி நபி காரணமாக மேட்டுப்பாளையத்தில் நடக்க இருந்த நடைபயணம் ஒத்திவைக்கப்பட்டது.
தொடர்ந்து அவரது டெல்லி பயணம், உடல்நலக்குறைவு காரணமாக அவரது நடைபயணம் மீண்டும் ஒருமுறை ஒத்திவைக்கப்பட்டு, இன்று 16-ந்தேதி அவினாசியில் இருந்து தொடங்கும் என தமிழக பா.ஜனதா தலைமை அறிவித்தது. அதன்படி இன்று காலை 11மணிக்கு நீலகிரி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்பூர் மாவட்டம் அவினாசி தொகுதியில் இருந்து தனது 3-ம் கட்ட நடை பயணத்தை அண்ணாமலை தொடங்கினார். மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை, உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத் துறை மந்திரி பியூஸ்கோயல், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை இணை மந்திரி எல்.முருகன் ஆகியோர் நடைபயணத்தை தொடங்கி வைத்தனர்.
அவிநாசி சேவூர் ரோட்டில் இருந்து நடைபயணத்தை தொடங்கிய அண்ணாமலை , அவிநாசி தாலுகா அலுவலகம், வடக்கு ரதவீதி, கிழக்கு ரத வீதி , பி.எஸ். சுந்தரம் வீதி வழியாக சுமார் 2 கி.மீ., தூரம் வரை நடந்து சென்று அவினாசி புதிய பஸ் நிலையத்தை அடைந்தார். அங்கு பொதுமக்கள் மற்றும் கட்சியினர் மத்தியில் அண்ணாமலை பேசினார்.
அவிநாசியில் நடை பயணம் மேற்கொண்ட அண்ணாமலைக்கு வழி நெடுகிலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவருடன் திரளான பா.ஜனதா கட்சியினரும் ஊர்வலமாக நடந்து வந்தனர். வழிநெடுகிலும் சாலையோரம் திரண்டிருந்த பொதுமக்களை பார்த்து அண்ணாமலை உற்சாகமாக கையசைத்தும், கும்பிட்ட வாறும் நடந்து சென்றார்.
அப்போது பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை புகார் பெட்டியில் அளித்தனர். வியாபாரிகளை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை நேரிடையாக கேட்டறிந்ததுடன் அதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
அண்ணாமலை நடை பயணத்தையொட்டி அவினாசியில் பா.ஜ.க.,கொடி, தோரணங்களுடன் தொண்டர்கள் உற்சாக நடனமாடினர்.
அண்ணாமலையை வரவேற்று அவிநாசியின் பல்வேறு பகுதிகளில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் சார்பில் வரவேற்பு வளையங்கள், டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தது. கொங்குநாட்டின் பாரம்பரிய கலையான வள்ளி கும்மி நடனம் ஆடியும் வரவேற்பு அளிக்கப்பட்டது. அண்ணாமலை நடைபயணத்தால் அவிநாசி பகுதியானது களை கட்டியது. ஏராளமான போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அவினாசியில் நடைபயணத்தை முடித்து கொண்டு காரில் மேட்டுப்பாளையத்திற்கு அண்ணாமலை செல்கிறார்.
பின்னர் மாலை 4 மணிக்கு மேட்டுப்பாளையம் மெட்ரோ பள்ளி முன்பு அண்ணாமலை தனது நடைபயணத்தை தொடங்குகிறார்.அவருக்கு மேட்டுப்பாளையம், காரமடை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பா.ஜ.க.வினர் திரண்டு வந்து மேள, தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். வரவேற்பு முடிந்ததும், அங்கிருந்து பல்வேறு வீதிகள் வழியாக 2 அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு நடந்து செல்கிறார்.மெட்ரோ பள்ளியில் தொடங்கும் பயணம் மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் மாலை 6.30 மணிக்கு முடிவடைகிறது. அதனை தொடர்ந்து அங்கு பா.ஜனதா சார்பில் பொதுக்கூட்டம் நடக்கிறது.
அந்த கூட்டத்தில் பங்கேற்று அண்ணாமலை பேசுகிறார். அவினாசி மற்றும் மேட்டுப்பாளையத்தில் நடைபெறும் நடைபயணத்தில் மத்திய மந்திரிகள் பியூஸ்கோயல், எல்.முருகன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
அவினாசி, மேட்டுப்பாளையத்தில் இன்று நடைபயணம் மேற்கொள்ளும் அண்ணாமலை, நாளை 17-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) ஈரோடு மாவட்டம் பவானி, அந்தியூரிலும், 18-ந்தேதி பவானிசாகர், கோபி செட்டிபாளையத்திலும் நடைபயணம் மேற்கொள்கிறார்.19-ந் தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடம், சூலூரிலும், 20-ந்தேதி திருப்பூர் தெற்கு, திருப்பூர் வடக்கு, 25-ந் தேதி பெருந்துறை, மொடக்குறிச்சி யிலும் நடைபயணம் செல்கிறார்.26-ந்தேதி ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கிலும், 27-ந்தேதி சங்ககிரி, குமாரபாளையம், 28-ந்தேதி நாமக்கல், திருச்செங்கோட்டிலும் நடை பயணம் மேற் கொள்கிறார். அ.தி.மு.க.வுடனான கூட்டணி முறிவுக்கு பிறகு அண்ணாமலை இன்று முதல் மேற்கொள்ளும் 3-ம் கட்ட நடைபயணம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.