அமைச்சர் செந்தில்பாலாஜி குறித்து அவதூறு கருத்து: கோவையில் பா.ஜ.க. நிர்வாகி அதிரடி கைது- அண்ணாமலை கண்டனம்
- பொதுமக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
- கருத்துச் சுதந்திரத்தை முடக்கி விடலாம் என்று திமுக அரசு கனவு காண்பதாக அண்ணாமலை கூறி உள்ளார்.
கோவை:
கோவை காளப்பட்டியை சேர்ந்தவர் செல்வக்குமார். இவர் மாநில பா.ஜ.க தொழில்துறை பிரிவு துணைத் தலைவராக உள்ளார்.
இவர் சமூக வலைதளமான டுவிட்டர் பக்கத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறான கருத்துக்களை பதிவிட்டு வந்ததாக தெரிகிறது.
இதுகுறித்து கோவை கணபதி புதூரை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
சமூக வலைதளத்தில் செல்வகுமார் பதிவிட்டு வரும் கருத்துக்கள் இரு பிரிவினருக்கு இடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக புகாரில் கூறப்பட்டு இருந்தது.
புகாரின் பேரில், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், பதற்றத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பா.ஜ.க நிர்வாகி செல்வக்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே பா.ஜ.க கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி தலைமையில் 20-க்கும் மேற்பட்ட பா.ஜ.கவினர் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது பாலாஜி உத்தம ராமசாமி கூறும்போது, நாளை மறுநாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை ஊழல் பட்டியல் வெளியிடும் நேரத்தில் அச்சுறுத்தல் காரணமாக பா.ஜ.க நிர்வாகியை கைது செய்துள்ளனர். இதற்கு நாங்கள் அஞ்ச மாட்டோம் என்றார்.
கோவையில் பா.ஜ.க நிர்வாகி கைது செய்யப்பட்டதற்கு தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது:-
தமிழக பாஜக தொழில்துறை பிரிவு மாநிலத் துணைத் தலைவர் செல்வக்குமாரை கைது செய்துள்ள திமுக அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆளுங்கட்சியின் தவறுகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களைக் கைது செய்வதன் மூலம், ஆளுங்கட்சிக்கு எதிரான குரல்களை அடக்கி, கருத்துச் சுதந்திரத்தை முடக்கி விடலாம் என்று கனவு காண்கிறது திமுக அரசு. இதற்கெல்லாம் அஞ்சுபவர்களில்லை தமிழக பாஜக தொண்டர்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.