காலை உணவு திட்டம் ஆய்வு: 'இது உப்புமாவா? பொங்கலா?'- விடை தெரியாமல் தவித்த அரியலூர் கலெக்டர்
- அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அங்கன்வாடி மையம், ஊராட்சி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று அவர் ஆய்வு மேற்கொண்டார்.
- சமையல் கூடத்திற்குள் நுழைந்த கலெக்டர் அங்கு தயாரிக்கப்பட்ட காலை உணவு குறித்து சமையல் செய்தவர்களிடம் கேட்டார்.
அரியலூர்:
உங்கள் ஊரில் உங்களை தேடி திட்டத்தின் கீழ் அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, நல்லாம்பாளையம் கிராமத்தில் முகாமிட்டிருந்தார். அப்போது அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அங்கன்வாடி மையம், ஊராட்சி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று அவர் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் பொதுமக்களை சந்தித்தும் அவர் குறைகளை கேட்டறிந்தார். இதன் ஒரு பகுதியாக நல்லாம்பாளையத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் அவர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு தயாராகி கொண்டிருந்தது. சமையல் கூடத்திற்குள் நுழைந்த கலெக்டர் அங்கு தயாரிக்கப்பட்ட காலை உணவு குறித்து சமையல் செய்தவர்களிடம் கேட்டார். அப்போது காலை உணவாக உப்புமா தயாரிக்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டது.
இதனை தொடர்ந்து எனக்கு கொஞ்சம் தாருங்கள் என்று தட்டில் வாங்கி, உப்புமாவை சாப்பிட்ட கலெக்டர், என்ன இது உப்புமாவா? பொங்கலா? என்று சந்தேகத்தை கிளப்பினார். அதற்கு சமையலர்கள் விளக்கம் அளித்தனர். ருசி என்னமோ நன்றாகதான் உள்ளது. ஆனால் பொங்கலை போல அரிசியெல்லாம் உள்ளதே என்று கேட்ட கலெக்டர், இனி அந்தந்த உணவை, அந்தந்த உணவு பொருட்களை கொண்டு, அந்தந்த சமையல் முறையில் தயாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.