பொதுத்தேர்வு வினாத்தாள் கசிந்ததா?- சி.பி.எஸ்.இ. நிர்வாகம் விளக்கம்
- செய்திகள் பரப்புபவர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் சி.பி.எஸ்.இ. நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது.
- தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கை எடுக்க டெல்லி போலீசாரிடம் சி.பி.எஸ்.இ. புகார் அளித்திருக்கிறது.
சென்னை:
சி.பி.எஸ்.இ. 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. வருகிற ஏப்ரல் மாதம் 5-ந்தேதியுடன் தேர்வு நிறைவு பெற உள்ளது. இதில் நேற்று நடைபெற இருந்த சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆங்கில வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின.
இதையடுத்து சி.பி.எஸ்.இ. நிர்வாகம், 'இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், வாரியத்தேர்வுகளை சுமுகமாக நடத்தி முடிப்பதற்கு இடையூறு விளைவிக்கும் எந்த செயல்களிலும் ஈடுபட வேண்டாம்' என்றும் மாணவர்கள், பெற்றோருக்கு அறிவுறுத்தி இருக்கிறது.
இதுதொடர்பாக சி.பி.எஸ்.இ. அதிகாரிகள் கூறும்போது, 'யூ-டியூப், டுவிட்டர், பேஸ்புக் மற்றும் பிற சமூக வலைதளங்களில் வினாத்தாள் கசிந்துவிட்டதாகவும், வினாத்தாள்கள் தேவைப்படுபவர்கள் அணுகுவது தொடர்பாக தவறானத்தகவல்களை தொடர்ந்து வதந்திகளை பரப்பி வருவது சி.பி.எஸ்.இ. கவனத்துக்கு வந்திருக்கிறது. சம்பந்தப்பட்ட நபர்களின் குழுக்கள் மற்றும் ஏஜென்சிகள் மாணவர்கள், பெற்றோரிடம் இருந்து இதன் மூலம் பணத்தை பெற்று ஏமாற்ற நினைக்கின்றனர். இது மாணவர்கள், பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற குழப்பத்தையும், பீதியையும் ஏற்படுத்துகின்றன. இதுபோன்ற செய்திகள் பரப்புபவர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் சி.பி.எஸ்.இ. நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது' என்றனர்.
மேலும் இந்த செய்திகளை சமூக வலைதளங்களில் பரப்புபவர்கள் மீது இந்திய அரசியலமைப்பு சட்டம் (ஐ.பி.சி.) மற்றும் தகவல் தொழில்நுட்ப (ஐ.டி.) சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கை எடுக்க டெல்லி போலீசாரிடம் சி.பி.எஸ்.இ. புகார் அளித்திருக்கிறது.