சிகாகோ கடற்கரையில் சைக்கிள் ஓட்டி மகிழ்ந்த முதலமைச்சர்
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவுக்கு அரசு முறை பயணம் சென்றுள்ளார்.
- சிகாகோ வந்தடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, சிகாகோவிற்கான துணைத் தூதர் சோம்நாத் கோஷ் மலர்கொத்து வழங்கி வரவேற்றார்.
சென்னை:
தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் நோக்கத்துடனும், மாநிலத்தில் தொழில் முதலீடுகளையும், வளர்ச்சியையும் மேம்படுத்துவதற்காகவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவுக்கு அரசு முறை பயணம் சென்றுள்ளார்.
சான்பிரான்சிஸ்கோவில் உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டன, இதன்மூலம் மொத்தம் ரூ.1,300 கோடி முதலீட்டில் 4,600 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், கூகுள் நிறுவனத்துடன் தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவு ஆய்வகங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு அரசின் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ், கூகுள் நிறுவனத்தின் வாயிலாக 20 லட்சம் இளைஞர்களுக்கு அதிநவீன செயற்கை நுண்ணறிவு திறன் வளர்ச்சியுடன் பயிற்சி அளிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நேற்று சான் பிரான்சிஸ்கோவிலிருந்து சிகாகோ வந்தடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, சிகாகோவிற்கான துணைத் தூதர் சோம்நாத் கோஷ் மலர்கொத்து வழங்கி வரவேற்றார்.
இந்நிலையில் அமெரிக்காவின் சிகாகோ கடற்கரை பகுதியில் சைக்கிள் ஓட்டி உடற்பயிற்சியில் ஈடுபட்ட வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,
"புதிய கனவுகளுக்கான களம் அமைக்கும் மாலையின் பேரமைதி" என பதிவிட்டுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிகாகோவில் பல்வேறு தொழில் நிறுவனங்களின் உயர் அலுவலர்களை சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுக்க உள்ளார்.