தமிழ்நாடு

முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. விழுப்புரம் கோர்ட்டில் இன்று ஆஜர்: வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

Published On 2024-01-29 08:12 GMT   |   Update On 2024-01-29 08:12 GMT
  • முன்னாள் டி.ஜி.பி ராஜேஷ்தாஸ் மீதான வழக்கு விசாரணை விழுப்புரம் கோர்ட்டில் கடந்த 24-ந்தேதி நடந்தது.
  • ராஜேஷ்தாஸ் நேரில் ஆஜர் ஆகி வாதாடுவதற்கு கோர்ட் அனுமதி வழங்கி இருந்தது.

விழுப்புரம்:

பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாசுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரத்து 500 அபராதமும், அந்த பெண் அதிகாரியின் காரை வழிமறித்து சாவியை பிடுங்கிய செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு கண்ணனுக்கு ரூ.500 அபராதமும் விதித்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.

இந்த தீர்ப்பை எதிர்த்து இருவரும், விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்தனர். இதனிடையே முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ் தரப்பு வக்கீல்கள், இவ்வழக்கை வேறு மாவட்ட கோர்ட்டுக்கு மாற்ற வேண்டுமென்று சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த கோர்ட்டு, இம்மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை பிறப்பிக்க விழுப்புரம் கோர்ட்டுக்கு தடை எதுவும் இல்லை என்றும், ஜனவரி 24-ந் தேதிக்குள் இவ்வழக்கை முடிக்க வேண்டும் என்றும் விழுப்புரம் கோர்ட்டுக்கு உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு மேல்முறையீடாக சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். அம்மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில் முன்னாள் டி.ஜி.பி ராஜேஷ்தாஸ் மீதான வழக்கு விசாரணை விழுப்புரம் கோர்ட்டில் கடந்த 24-ந்தேதி நடந்தது. பின்னர் வழக்கு விசாரணை இன்று (29-ந்தேதி) ஒத்திவைக்கப்பட்டது. அன்று ராஜேஷ்தாஸ் நேரில் ஆஜர் ஆகி வாதாடுவதற்கு கோர்ட் அனுமதி வழங்கி இருந்தது.

அதன்படி முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ் இன்று விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார். விசாரணையை வருகிற 31-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

Similar News