இந்திய கம்யூனிஸ்டு கட்சி மேலும் ஒரு தொகுதி கேட்கிறது: 2-ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு சுப்பராயன் எம்.பி. பேட்டி
- கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- நாங்கள் ஏற்கனவே வென்ற தொகுதிகளுடன் கூடுதலாக ஒரு தொகுதி கேட்டிருக்கிறோம்.
சென்னை:
பாராளுமன்றத் தேர்தலுக்கு தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் தொகுதி உடன்பாடு செய்துகொள்ள முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தி முடித்துள்ளன.
இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் அண்ணா அறிவாலயத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியுடன் இன்று 2-வது கட்ட பேச்சு வார்த்தை நடைபெற்றது. குழு தலைவர் டி.ஆர்.பாலு முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், திருச்சி சிவா ஆகியோர் பங்கேற்றனர்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சுப்பராயன் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ. பழனிசாமி, மாநில துணை செயலாளர் வீரபாண்டியன் கலந்து கொண்டனர்.
20 நிமிடம் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பிறகு சுப்பராயன் எம்.பி., நிருபர்களை சந்தித்தார்.
40 தொகுதிகளிலும் தி.மு.க. அணி வெற்றி பெறும் என்பதை தமிழ்நாட்டின் கிராமப்புற நகர்ப்புற கள நிலவரங்கள் உறுதிப்படுத்துகின்றன.
அதன் அடிப்படையில் தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தைக்கு 2-வது கட்டமாக நாங்கள் வந்தோம். பேச்சுவார்த்தை மிகமிக சுமூகமாக நடைபெற்றது. நல்ல முறையில் திருப்தி அளிக்கிற வகையில் பேச்சு வார்த்தை நடந்தது.
நாங்கள் ஏற்கனவே வென்ற தொகுதிகளுடன் கூடுதலாக ஒரு தொகுதி கேட்டிருக்கிறோம். அவர்கள் பரிசீலிப்பதாக கூறி உள்ளனர். 3-ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு வருகிற 3-ந் தேதி வர உள்ளேம். அப்போது தொகுதி உடன் பாடு ஏற்பட்டுவிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு ஏற்கனவே திருப்பூர் மற்றும் நாகை தொகுதிகள் தருவதாக கூறப்பட்டிருந்த நிலையில் இப்போது கூடுதலாக ஒரு தொகுதி கேட்பதால் இன்று தொகுதி பங்கீடு கையெழுத்தாக வில்லை.