தமிழ்நாடு

என்ஜினீயரிங் கட்-ஆப் குறைய வாய்ப்பு: பி.காம். படிப்புக்கு கடும் போட்டி நிலவும்- கல்வியாளர்கள் தகவல்

Published On 2023-05-09 07:07 GMT   |   Update On 2023-05-09 07:07 GMT
  • கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வேதியியல், இயற்பியல் போன்ற முக்கிய பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
  • கடந்த ஆண்டு அனைத்து போர்டுகளையும் உள்ளடக்கிய ரேங்க் பட்டியலில் 134 மாணவர்கள் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்றிருந்தனர்.

சென்னை:

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் தேர்வு எழுதிய 94 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதில் கணித பாடத்தில் 690 பேர் மட்டும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாகும். கடந்த ஆண்டில் 1,858 பேர் கணிதத்தில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று இருந்த நிலையில், இந்த ஆண்டு சுமார் 3 பங்கு சென்டம் குறைந்துள்ளது.

ஆனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வேதியியல், இயற்பியல் போன்ற முக்கிய பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

வேதியியல் பாடத்தை பொறுத்தவரை கடந்த ஆண்டு 1,500 மாணவர்கள் மட்டுமே 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று இருந்த நிலையில், இந்த ஆண்டு 3,909 பேர் சென்டம் வாங்கி உள்ளனர்.

இதே போல இயற்பியல் பாடத்தில் கடந்த ஆண்டு சென்டம் வாங்கியவர்களின் எண்ணிக்கை 634 ஆக இருந்த நிலையில் இந்த ஆண்டு அது 812 ஆக உயர்ந்துள்ளது.

இந்த ஆண்டு உயிரியலில் 1,494 பேரும், தாவரவியலில் 340 பேரும், விலங்கியலில் 154 பேரும், கணித அறிவியலில் 4,618 பேரும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

கணினி அறிவியல் பாடத்தில் கடந்த ஆண்டு 3,827 பேர் சென்டம் பெற்றிருந்தனர். அது இந்த ஆண்டு 4,618 ஆக உயர்ந்துள்ளது.

மொத்தத்தில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 8,544 மாணவ-மாணவிகள் அதிகமாக 100-க்கு 100 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளனர். பிளஸ்-2 தேர்வில் கணித அறிவியல், இயற்பியல், வேதியியல் பாடங்களில் பெற்ற மதிப்பெண்கள் 200 மதிப்பெண்ணாக குறைக்கப்பட்டு (கணிதம் 100, வேதியியல்+ இயற்பியல் 100 மதிப்பெண்) அடிப்படையில் என்ஜினீயரிங் தர வரிசை பட்டியல் தயாரிக்கப்படும்.

இந்த ஆண்டு கணித பாடத்தில் சென்டம் வாங்கியவர்கள் எண்ணிக்கை குறைந்தாலும் கூட வேதியியல் பாடத்தில் கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் 2 மடங்கு பேர் கூடுதலாக முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

என்ஜினீயரிங் தரவரிசை பட்டியலை பொறுத்தவரை இயற்பியல், வேதியியலை விட 2 மடங்கு கூடுதல் முக்கியத்துவம் கணித பாடத்திற்கு கொடுக்கப்படுகிறது. எனவே என்ஜினீயரிங் கட்-ஆப் மதிப்பெண் சற்று குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

மேலும் கடந்த ஆண்டு அனைத்து போர்டுகளையும் உள்ளடக்கிய ரேங்க் பட்டியலில் 134 மாணவர்கள் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்றிருந்தனர்.

இந்த ஆண்டு கணித பாடத்தில் சென்டம் வாங்கியவர்கள் எண்ணிக்கை சற்று குறைந்திருப்பதோடு, அந்த பாடத்தில் 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தவர்களின் எண்ணிக்கையும் குறைவாக உள்ளதால் என்ஜினீயரிங் சேர்கைக்கான கவுன்சிலிங்கில் கட்-ஆப் மதிப்பெண் குறைய வாய்ப்பு உள்ளது என கல்வி நிபுணர்கள் கணித்துள்ளனர்.

அதே நேரத்தில் கணக்கு பதிவியல் மற்றும் வணிகவியல் பாடங்களில் சென்டம் வாங்கியவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதால் நகர கல்லூரிகளில் பி.காம் இடங்களை பெறுவதற்கு கடும் போட்டி நிலவும் என கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

கணக்கு பதிவியலில் 6,573 மாணவர்கள் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 44 சதவீதம் அதிகமாகும். இதே போல வணிகவியலில் 5,678 பேர் சென்டம் பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை ஒப்பிடும் போது 22 சதவீதம் அதிகமாகும்.

எனவே லயோலா போன்ற கல்லூரிகளில் இந்த ஆண்டு பி.காம் பொதுப்பிரிவு இடங்களுக்கு கட்-ஆப் மதிப்பெண்கள் 100 சதவீதத்தை கூட தொடக்கூடும் என கல்வி ஆலோசகர்கள் கணித்துள்ளனர்.

இதுகுறித்து கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி கூறுகையில், கடந்த ஆண்டு லயோலா கல்லூரி, ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரிகளில் பி.காம் இடங்களுக்கான கட்-ஆப் 98 சதவீதம் வரை இருந்தது. இந்த ஆண்டு அங்கு பி.காம் படிப்புகளுக்கு கட்-ஆப் 99 சதவீதத்தை தாண்டும் அல்லது 100 சதவீதத்தை தொட வாய்ப்புள்ளது.

இந்த ஆண்டு சி.பி.எஸ்.சி. காமர்ஸ் ஸ்ட்ரீம் தேர்வுகள் கூட எளிதாக இருந்ததாகவும் அந்த மாணவர்களும் அதிக மதிப்பெண்கள் பெறலாம் என்றும் அவர் கூறினார்.

ஒட்டு மொத்தமாக வேதியியல், கணித அறிவியல் போன்ற பாடங்களிலும் குறைந்தது ஒரு பாடத்திலாவது முழு மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு 35 சதவீதம் அதிகரித்துள்ளது.

Tags:    

Similar News