மதுரையில் ஆவின் பால் விநியோகம் தாமதம்: அலுவலகத்தில் முகவர்கள் முற்றுகை
- பல சமயங்களில் பால் சப்ளை செய்யும் வாகனங்களை திருப்பி அனுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- பால் வாங்க வரும் பொதுமக்கள் சிறிது நேரம் காத்திருந்துவிட்டு தனியார் பால் வாங்கி சென்று விடுகின்றனர்.
மதுரை:
மதுரையில் ஆவின் பால் விநியோகம் தாமதமாவது தொடர்கதையாகி வருகிறது. அண்ணாநகர் பகுதியில் உள்ள ஆவின் தலைமை அலுவலகத்தில் இருந்து அனைத்து பகுதிகளுக்கும் காலை 2 மணி முதல் 3 மணிக்குள் பால் சப்ளையாகிவிடும்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ஆவின் பால் தாமதமாக வருவதாக முகவர்கள் குற்றம் சாட்டி வந்தனர். பல சமயங்களில் பால் சப்ளை செய்யும் வாகனங்களை திருப்பி அனுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் மதுரை சாத்தமங்கலம் பகுதியில் இன்று காலை 7 மணி வரை ஆவின் பால் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த முகவர்கள் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று காலை 7 மணி வரை பால் வாகனம் வரவில்லை. அடிக்கடி தாமதமாக வருகிறது. பால் வாங்க வரும் பொதுமக்கள் சிறிது நேரம் காத்திருந்துவிட்டு தனியார் பால் வாங்கி சென்று விடுகின்றனர். இதனால் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது.
இதுகுறித்து நிர்வாகத்திடம் கேட்டால், ஆட்கள் பற்றாக்குறை இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் அனைத்து பகுதிகளும் தனியார் பால் மட்டும் வந்து விடுகிறது. பிற மாவட்டங்களில் இருந்து வரும் தனியார் பால்கள் கூட சரியான நேரத்தில் மதுரைக்குள் சப்ளை செய்யப்படுகிறது.
ஆனால் மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளுக்கு ஆவின் பாலை சப்ளை செய்வதில் தாமதம் ஏற்படுவது ஏன்? என தெரியவில்லை. நிர்வாகத்திடம் பல முறை கூறியும், முழு அளவில் நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து தீவிரமாக விசாரித்து ஆவின் பால் சரியான நேரத்தில் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.