தமிழ்நாடு

தி.மு.க. ஆட்சி 3 ஆண்டு கடந்தும் நெல் மூட்டைகள் மழையில் நனைவது தொடர் கதையாகிறது- ஓ.பன்னீர்செல்வம்

Published On 2024-05-13 04:39 GMT   |   Update On 2024-05-13 04:39 GMT
  • தமிழ்நாடு முழுவதுமே நெல் மூட்டைகளை பாதுகாக்க இயலாத ஓர் அவல நிலை நிலவுகிறது.
  • அரசின் தாமதமான நடவடிக்கை காரணமாக தங்களுக்கு லட்சக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

சென்னை:

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

விவசாயிகளிடம் இருந்து நெல் மற்றும் இதர தானியங்களை கொள்முதல் செய்து அவற்றை பாதுகாப்பான முறையில் சேமித்து வைக்கும் வகையில், கிடங்குகளை கட்ட வேண்டிய பொறுப்பும், கடமையும் தமிழ்நாடு அரசிற்கு உண்டு. ஆனால், இதைச் செய்ய தி.மு.க. அரசு தவறிவிட்டது. கடந்த மூன்று ஆண்டு காலமாக, நெல் மற்றும் இதர தானியங்கள் மழையில் நனைவதும், இதன் விளைவாக விவசாயிகளுக்கு குறைந்த விலை கிடைப்பதும் வாடிக்கையாகிவிட்டது.

அண்மையில், விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த கனமழையால் செஞ்சியில் உள்ள அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 12,000 நெல் மூட்டைகள் சேதமடைந்துள்ளதாகவும், நெல் மூட்டைகள் மழையில் நனைவதன் காரணமாக குறைந்த விலைதான் கிடைக்கிறது என்றும், தார்ப்பாய் கூட வழங்கப்பட வில்லை என்றும் மேல்மருவத்தூர், திண்டிவனம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இந்தச் சுவடு மறைவதற்குள், மறைமலைநகரை அடுத்த கருநீலம் ஊராட்சி யில் செயல்பட்டு வரும் அரசு நேரடி கொள்முதல் நிலையத்திற்கு விவசாயிகள் தங்களது நிலங்களில் விளைந்த நெல்லினை உதிரியாகவும், 5,000-க்கும் மேற்பட்ட மூட்டைகளிலும் கொண்டு வந்ததாகவும், இரு தினங்களுக்கு முன்பு பெய்த திடீர் மழை காரணமாக அனைத்து நெல் மூட்டைகளும் சேதமடைந்ததாகவும், உடனுக்குடன் எடை போட்டு அரவை நிலையத்திற்கு அனுப்பியிருந்தால் நெல் மூட்டைகள் காப்பாற்றப்பட்டு இருக்கும் என்றும், அரசின் தாமதமான நடவடிக்கை காரணமாக தங்களுக்கு லட்சக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

தமிழ்நாடு முழுவதுமே நெல் மூட்டைகளை பாதுகாக்க இயலாத ஓர் அவல நிலை நிலவுகிறது. நெல் மூட்டைகளை பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டுமென்பதுதான் விவசாயிகளின் எதிர்பார்ப்பு. இந்த எதிர்பார்ப்பு மூன்று ஆண்டுகள் கடந்தும் பூர்த்தி செய்யப்படவில்லை. மழையில் நெல் மூட்டைகள் நனைவது என்பது தொடர் கதையாக விளங்குகிறது.

எனவே தானியங்களை பாதுகாப்பான முறையில் வைத்திருக்கத் தேவையான கிடங்குகளை கட்டிட முதலமைச்சர் உத்தர விட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News