தமிழ்நாடு

கைக்குழந்தையுடன் காத்திருந்த பெண்... பஸ்சை நிறுத்தாமல் சென்ற டிரைவர் பணியிடை நீக்கம்

Published On 2024-01-07 03:44 GMT   |   Update On 2024-01-07 03:44 GMT
  • சாலையோரம் கைக்குழந்தையுடன் நின்றிருந்த இளம்பெண் ஒருவர் அந்த பஸ்சை நிறுத்துமாறு டிரைவரை நோக்கி கை காட்டினார்.
  • இளம்பெண் அதுகுறித்து கேட்டபோது, தகாத வார்த்தைகளை பயன்படுத்தி பேசியதாக தெரிகிறது.

பந்தலூர்:

நீலகிரி மாவட்டம் கூடலூரில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக கிளை உள்ளது. இங்கிருந்து சுற்றுவட்டார கிராமங்களான நாடுகாணி, தேவாலா, பந்தலூர், உப்பட்டி, பொன்னானி, முக்கட்டி, பிதிர்காடு, பாட்டவயல், முள்ளன்வயல், அம்பலமூலா, அய்யன்கொல்லிக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கூடலூரில் இருந்து அய்யன்கொல்லிக்கு நேற்று முன்தினம் மாலையில் அரசு பஸ் ஒன்று சென்றது. அந்த பஸ்சை டிரைவர் பன்னீர் செல்வம் என்பவர் ஓட்டினார்.

அய்யன்கொல்லி அருகே சாலையோரம் கைக்குழந்தையுடன் நின்றிருந்த இளம்பெண் ஒருவர் அந்த பஸ்சை நிறுத்துமாறு டிரைவரை நோக்கி கை காட்டினார். ஆனால் டிரைவர் பஸ்சை நிறுத்தாமல் அய்யன்கொல்லிக்கு ஓட்டி சென்றார்.

உடனே வாடகை வாகனத்தில் ஏறி அய்யன்கொல்லிக்கு கைக்குழந்தையுடன் வந்த இளம்பெண், அங்கு நின்ற அந்த பஸ்சின் டிரைவரிடம், 'கைக்குழந்தையுடன் நின்று கை காட்டியும், ஏன் பஸ்சை நிறுத்தவில்லை' என்று கேட்டார். அதற்கு அவர், நான் கவனிக்கவில்லை என்று கூறியதோடு மீண்டும் அந்த இளம்பெண் அதுகுறித்து கேட்டபோது, தகாத வார்த்தைகளை பயன்படுத்தி பேசியதாக தெரிகிறது.

இதை சிலர் வீடியோ எடுத்து, சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இது தற்போது வைரலாக பரவி வருகிறது. இதை அறிந்த கூடலூர் போக்குவரத்து கழக கிளை மேலாளர் அருள்கண்ணன், ஊட்டி போக்குவரத்து கழக பொது மேலாளர் நடராஜனுக்கு தகவல் தெரிவித்தார். அவர் விசாரணை நடத்தி, டிரைவர் பன்னீர்செல்வத்தை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

Tags:    

Similar News