தமிழ்நாடு

தண்டாவாளத்தில் ஓடி ரெயிலை நிறுத்துவதாக போதை வாலிபர் ரகளை: ரெயில் மோதி படுகாயம்

Published On 2023-09-16 04:14 GMT   |   Update On 2023-09-16 04:14 GMT
  • ரெயில் மோதியதில் போதை வாலிபர் தூக்கி வீசப்பட்டார்.
  • எக்ஸ்பிரஸ் ரெயில் 10 நிமிடம் காலதாமதமாக புறப்பட்டு சென்றது.

அரக்கோணம்:

அரக்கோணம் ரெயில் நிலையம் மக்கள் அதிகம் கூடும் இடமாக உள்ளது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த ரெயில் நிலையத்தில் நேற்று மாலை பயணிகள் கூட்டம் அலைமோதியது.

அப்போது 2-வது பிளாட்பாரத்தில் பெங்களூர்-அசாம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது.

அரக்கோணம் ரெயில் நிலையம் அருகே உள்ள ஏ.பீ.எம். சர்ச் பகுதியைச் சேர்ந்த அருண் என்பவர் போதையில் அங்கு வந்தார். அவர் 2-வது பிளாட்பார தண்டவாளத்தில் நின்று கொண்டு ரெயிலை நிறுத்தப் போவதாக ரகளையில் ஈடுபட்டார். அதனைப் பார்த்த சக பயணிகள் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர்.

ரெயில் வருவதை கண்டதும் போதை வாலிபர், தண்டவாளத்தில் இறங்கி ரெயிலை நோக்கி ஓடினார். அப்போது அவர் நிலை தடுமாறி தண்டவாளத்தில் திடீரென கீழே விழுந்து, எழுந்திருக்க முடியாமல் தட்டு தடுமாறினார்.

இதனைப் பார்த்த என்ஜின் டிரைவர், ரெயிலை நிறுத்த முயற்சி செய்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில் என்ஜின் முன்பக்கம் போதை வாலிபர் மீது மோதிவிட்டு சிறிது தூரம் சென்று நின்றது.

ரெயில் மோதியதில் போதை வாலிபர் தூக்கி வீசப்பட்டார். இதைப் பார்த்த பயணிகள் மற்றும் ரெயில்வே போலீசார் அந்த நபர் இறந்துவிட்டதாக கருதி அருகில் சென்று பார்த்தனர்.

ஆனால் போதை வாலிபர் உடலில் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது தெரிய வந்தது.

இதனையடுத்து போலீசார் போதை வாலிபருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து எக்ஸ்பிரஸ் ரெயில் 10 நிமிடம் காலதாமதமாக புறப்பட்டு சென்றது. போதையில் வாலிபர் ரெயிலை நிறுத்த முயற்சி செய்த சம்பவம் அரக்கோணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News