அ.தி.மு.க. கொண்டு வந்த நலத்திட்டங்களை ரத்து செய்ததே தி.மு.க.வின் சாதனை: எடப்பாடி பழனிசாமி
- அனைத்து தடைகளையும் உடைத்து மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும்.
- தி.மு.க.வின் 3 ஆண்டுகால ஆட்சியில் மக்களுக்கு வேதனை மட்டுமே பரிசாக கிடைத்துள்ளது.
ஆரணி:
ஆரணி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கஜேந்திரனை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருவண்ணாமலை சேவூர் புறவழிச்சாலையில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
அனைத்து தடைகளையும் உடைத்து மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும்.
நான் ஒரு விவசாயி; விவசாயிகள் மட்டுமே யாருக்கும் பயப்பட மாட்டார்கள். என்னை விமர்சிக்கும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு விவசாயத்தைப் பற்றி என்ன தெரியும்?
அ.தி.மு.க. ஆட்சியில் மட்டுமே விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் தரப்பட்டது. உணவு உற்பத்தி அதிகரிப்பிற்கு தேசிய அளவில் அ.தி.மு.க. அரசுக்கு விருது கிடைத்தது. இந்தியாவிலேயே 140 விருதுகளை பெற்ற அரசு அ.தி.மு.க. அரசுதான்.
தமிழகத்தில் நடப்பது திராவிட மாடல் அரசு அல்ல; குழு அரசாங்கம்.
ஒவ்வொரு திட்டத்திற்கும் குழு போடும் அரசாகவே தி.மு.க. அரசு உள்ளது.
தி.மு.க.வின் 3 ஆண்டுகால ஆட்சியில் மக்களுக்கு வேதனை மட்டுமே பரிசாக கிடைத்துள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்த வாக்குறுதிகளில் 10 சதவீதம் கூட இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாக அளித்த வாக்குறுதியை தி.மு.க. நிறைவேற்றவில்லை.
அ.தி.மு.க. கொண்டு வந்த நலத்திட்டங்களை ரத்து செய்ததே தி.மு.க.வின் ஒரே சாதனை என தெரிவித்தார்.