தேர்வு தள்ளி வைப்பு: பள்ளி குழந்தைகளை கோடை வெயிலில் வதைப்பதா?
- தேர்தல் முடிந்து 23-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை தேர்வுத் தாள்களை திருத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
- கோடை வெயில் இன்னும் அதிகரிக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.
சென்னை:
தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரிக்கிறது. பாராளுமன்ற தேர்தலும் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது.
இதனால் 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான பள்ளி இறுதி தேர்வு 2-ந்தேதி தொடங்கி 12-ந்தேதிக்குள் முடியும் என்றும் 13-ந்தேதி முதல் கோடை விடுமுறை விடப்படும். அதன் பிறகு ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு இருந்தது.
மேலும் தேர்தல் முடிந்து 23-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை தேர்வுத் தாள்களை திருத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இந்நிலையில் ஈகை பெருநாளை முன்னிட்டு 2 தேர்வுகள் தள்ளி வைக்கப் பட்டுள்ளது. அதாவது 10-ந் தேதி நடைபெறுவதாக இருந்த அறிவியல் தேர்வை 12 நாட்கள் கழித்து 22-ந் தேதியும் 12-ந்தேதி நடக்க இருந்த சமூக அறிவியல் தேர்வு 11 நாட்கள் கழித்து 23-ந்தேதியும் நடக்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
கோடை வெயில் இன்னும் அதிகரிக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ள நிலையில் 2 தேர்வுகளையும் முன் கூட்டியே முடித்து இருக்கலாம். மொத்தம் 5 தேர்வுகள் தான். 2-ந்தேதி முதல் 12-ந் தேதி வரை ஒரு நாள் விட்டு ஒரு நாள்தான் தேர்வு நடைபெறுகிறது. எனவே அந்த இடைவெளியை குறைத்து முன் கூட்டியே முடித்து இருக்கலாம். இது தேவையில்லாமல் குழந்தைகளை வெயிலில் வதைப்பதாகும் என்று பெற்றோர்கள் வேதனை தெரிவித்துள்ளார்கள்.