புதுப்பாளையத்தில் ரூ.20 கோடியில் மேம்பாலம் கட்டப்படும்- அமைச்சர் சா.மு.நாசர் தகவல்
- கடந்த சில நாட்களாக பெய்த மழையால் பாலேஸ்வரம் அணைக்கட்டு நிரம்பி தண்ணீர் ஆரணி ஆற்றில் பாய்ந்து வந்ததால் இந்த தரைபாலம் நீரில் மூழ்கியது.
- புதுப்பாளையம்- அஞ்சாத்தம்மன் கோவில் அருகே ரூ.20 கோடியில் புதிய மேம்பாலம் கட்டப்படும் என்று அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்தார்.
பெரியப்பாளையம்:
கும்மிடிப்பூண்டி ஒன்றியம், புதுப்பாளையத்தில் இருந்து எல்லாபுரம் ஒன்றியம் அஞ்சாத்தம்மன் கோவில் பஸ் நிறுத்தம் அருகே ஆரணி ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் உள்ளது.
கடந்த சில நாட்களாக பெய்த மழையால் பாலேஸ்வரம் அணைக்கட்டு நிரம்பி தண்ணீர் ஆரணி ஆற்றில் பாய்ந்து வந்ததால் இந்த தரைபாலம் நீரில் மூழ்கியது.
இந்தத் தரைப்பாலத்தை அமைச்சர் சா.மு.நாசர், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே.கோவிந்தராசன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமாமகேஸ்வரி மற்றும் நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது இந்த தரைப்பாலம் மூழ்கி பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் புதுப்பாளையம்- அஞ்சாத்தம்மன் கோவில் அருகே ரூ.20 கோடியில் புதிய மேம்பாலம் கட்டப்படும் என்று அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்தார்.
மேலும் இந்த பணிகள் 2 ஆண்டுகளில் முடிவடையும் என்றும் இதற்கான ஆயத்த பணிகள் விரைவில் தொடங்கும் எனவும் அவர் கூறினார்.