சென்னையில் ஜி-20 கூட்டம் தொடங்கியது: பிரதமரின் முதன்மை செயலாளர் பங்கேற்பு
- இந்தியா, அமெரிக்கா, ரஷியா உள்பட 20 நாடுகள் இணைந்து ஜி20 கூட்ட மைப்பை உருவாக்கி உள்ளது.
- கல்வி, நிதி, மகளிர் மேம்பாடு சார்ந்த பணிக்குழு கூட்டம் சென்னையில் கடந்த ஜனவரி மாதம் நடத்தப்பட்டது.
சென்னை:
சென்னையில் ஜி 20 பேரிடர் அபாயத் தணிப்பு பணிக் குழுவின் இறுதிக் கூட்டம் இன்று தொடங்கியது. இந்த கூட்டம் 2 நாட்கள் நடைபெறுகிறது.
இந்தியா, அமெரிக்கா, ரஷியா உள்பட 20 நாடுகள் இணைந்து ஜி20 கூட்ட மைப்பை உருவாக்கி உள்ளது. 2023-ல் ஜி20 கூட்டமைப்புக்கு இந்தியா தலைமையேற்று உள்ளது.
இதையொட்டி ஜி20 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் பல்வேறு துறைகளின் பணிக்குழு கூட்டம் நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி கல்வி, நிதி, மகளிர் மேம்பாடு சார்ந்த பணிக்குழு கூட்டம் சென்னையில் கடந்த ஜனவரி மாதம் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து பேரிடர் அபாயத் தணிப்பு பணிக்குழுவின் இறுதிக் கூட்டம் சென்னையில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது.
சென்னை கிண்டியில் உள்ள சோழா ஓட்டலில் இன்று காலையில் நடைபெற்ற ஜி20 கூட்டத்தில் பிரதமரின் முதன்மை செயலாளர் மற்றும் தலைமை பொருளாதார ஆலோசகர் ஆனந்த் நாகேஸ்வரன், இங்கிலாந்து நிதித்துறையின் தலைமை பொருளாதார ஆலோசகர் கிளாரி லொம்பார்டெலி ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.
இதில் 80-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. நாளையும் தொடர்ந்து இந்த மாநாடு நடக்கிறது.