வயிற்று வலி தீர பூஜை செய்வதாக கூறி பள்ளி மாணவி வாழ்வை சீரழித்த பூசாரி
- அக்கம்பக்கத்தினர் பூசாரி பழனியிடம் சென்று மந்திரித்து வந்தால் மகளின் வயிற்று வலி தீர்ந்து விடும் எனக் கூறினர்
- பூசாரி பழனி நீண்ட காலமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு விசேஷ பூஜைகள் செய்து வந்துள்ளார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் மணிபிள்ளை பகுதியை சேர்ந்தவர் பழனி (வயது 65). இவர் அந்த பகுதியில் உள்ள கருப்புசாமி கோவிலில் பூசாரியாக இருந்து வருகிறார். அப்போது கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அருள்வாக்கு சொல்வார். ஒரு சில பக்தர்களுக்கு அவரின் அருள்வாக்கு பலித்த காரணத்தினால் அந்த ஊர் மட்டுமல்லாமல் வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் வந்து சென்றனர்.
அதுமட்டுமல்லாமல் யாருக்காவது நீண்ட நாள் வியாதி, பில்லி சூனிய பாதிப்பு மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்டாலும் மந்திரித்து, விபூதி கொடுப்பதையும் வழக்கமாக கொண்டிருந்தார். இதனால் அவர் மீது மிகுந்த மரியாதையும், நம்பிக்கையும், பக்தியும் வைத்திருந்த மக்கள் பூசாரி சொல்வதை வேதவாக்காக நினைத்து வந்தனர்.
இதனால் அந்த ஊரை சேர்ந்த மக்கள் என்ன பிரச்சினை என்றாலும் தொடக்கத்தில் அவரை சென்று பார்த்து வந்தனர். ஒரு சில சுப காரியங்களுக்கும் அவரை அழைத்து சென்று மரியாதை செய்தனர். மொத்தத்தில் மணிபிள்ளை பகுதியில் பூசாரி பழனி ஒரு கடவுள் போல் வலம் வந்தார்.
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகேயுள்ள அன்னவாசல் பகுதியைச் சேர்ந்த சரவணன்-மீனாட்சி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தம்பதியின் 15 வயது மகள் தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார். இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். வயிற்றுவலிக்கு அவரது பெற்றோர் கைப்பக்குவமாக மருந்துகள் கொடுத்தும், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் மாணவிக்கு வயிற்று வலி பூரணமாக குணமாகவில்லை.
இதையடுத்து அக்கம்பக்கத்தினர் பூசாரி பழனியிடம் சென்று மந்திரித்து வந்தால் மகளின் வயிற்று வலி தீர்ந்து விடும் எனக் கூறினர். மேலும் தங்களின் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர். இதைக்கேட்டு அங்கலாய்த்து போன மாணவியின் தாய் தனது மகளை அழைத்துக்கொண்டு மணிபிள்ளை தெருவுக்கு சென்றார்.
பின்னர் வீட்டில் இருந்த கோவில் பூசாரி பழனியை சந்தித்து மகளுக்கு நீண்ட நாட்களாக வயிற்று வலி இருந்து வருகிறது. இதனை தீர்த்து வையுங்கள் என மன்றாடினார். உடனே பழனி அந்த அபலைப் பெண்ணிடம் உனது மகளுக்கு காத்து கருப்பு பிரச்சினை உள்ளது, என்னிடம் வந்துவிட்டாய் அல்லவா, இனிமேல் எதுவும் நேராது தைரியமாக இரு என்றார்.
மேலும் இந்த பிரச்சினைக்கு உனது மகளுக்கு தனிமையில் சிறப்பு பூஜை செய்ய வேண்டும் எனக் கூறி அவரை வெளியே காத்திருக்கும்படி செய்தார். பின்னர் மாணவியை மட்டும் தனியாக வீட்டிற்குள் அழைத்து சென்று சிறப்பு பூஜை செய்வதாக கூறி ஆடைகளை களைந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத மாணவி அதிர்ச்சியில் உறைந்தார். கூச்சல் போடக்கூட முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட அவர் செய்வதறியாமல் அழுது புலம்பினார்.
அப்போது கோவில் பூசாரி பழனி, இதை வெளியே சொன்னால் சாமி குத்தம் ஆகி செத்து விடுவாய் என மிரட்டினார். இதனால் உயிருக்கு பயந்து அந்த மாணவி நடந்த சம்பவத்தை தாயிடம் அப்போது சொல்லவில்லை. இருந்தபோதிலும் மாணவி அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் இருந்தார். இதனை கவனித்த அவரது தாய் மீனாட்சி மகளிடம், ஏன் மவுனமாக இருக்கிறாய் என்ன பிரச்சனை என்று கேட்டார்.
இனி மேலும் விஷயத்தை மறைத்தால் விபரீதமாகி விடும் என்று நினைத்த மாணவி, பூஜை என்ற பெயரில் கோவில் பூசாரி தன்னிடம் அத்துமீறிய சம்பவத்தை கூறினார். இதனைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மீனாட்சி, கடவுளாக நினைத்த பூசாரி இப்படி ஒரு கயமையை செய்துவிட்டாரே என்று கதறினார்.
தனது மகளுக்கு நேர்ந்த கொடுமை இனி யாருக்கும் நடக்கக்கூடாது என நினைத்த மீனாட்சி உடனடியாக கீரனூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் லதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் அந்த மாணவி பூசாரி பாலியல் பலாத்காரம் செய்ததில் மூன்று மாதம் கர்ப்பமாகி இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து கோவில் பூசாரி பழனியை போலீசார் கைது செய்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தார். வயிற்று வலிக்காக மந்திரித்து விபூதி வாங்கச் சென்ற 10-ம் வகுப்பு மாணவியை பூசாரி கற்பழித்து கர்ப்பமாக்கி சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த பூசாரி பழனி நீண்ட காலமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு விசேஷ பூஜைகள் செய்து வந்துள்ளார். ஆகவே வேறு பெண்களும் அவரால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதுபற்றி விசாரணை அதிகாரிகளிடம் கேட்டபோது, ஒருமுறை மட்டுமே மாணவியை சீரழித்ததாக பூசாரி பழனி தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாகவும், வேறு அவர் மீது எந்த புகாரும் வரவில்லை என்றும், புகார்கள் கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் பல்வேறு ரூபங்களில் உருவாகி வரும் சூழ்நிலையில் ஆன்மீகத்தின் பேரில் ஏற்படுத்தப்படுவதை ஏற்க முடியாது. இதுபோன்ற கயவர்களை கடுமையான சட்டத்தின் கீழ் தாமதமின்றி தண்டிக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த பெற்றோர்களின் எதிர்பார்ப்பு.