தமிழ்நாடு

சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் -அண்ணா சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளதை காணலாம்.

சென்னை முழுவதும் 47 பெரியார் சிலை - 17 அண்ணா சிலைகளுக்கு பலத்த பாதுகாப்பு

Published On 2022-09-27 10:12 GMT   |   Update On 2022-09-27 10:12 GMT
  • சட்டம்-ஒழுங்கை சீர் குலைக்கும் வகையில் செயல்படுபவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
  • பெரியார், அண்ணா சிலைகளை சேதப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒரு கும்பல் ஈடுபட்டுள்ளது.

சென்னை:

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பாரதிய ஜனதா பிரமுகர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் பதட்டத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து மாநிலம் முழுவதும் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் போலீஸ் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பெட்ரோல் குண்டு வீசியவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பாக 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பா.ஜனதா பிரமுகர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது.

சட்டம்-ஒழுங்கை சீர் குலைக்கும் வகையில் செயல்படுபவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பெரியார், அண்ணா சிலைகளை சேதப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒரு கும்பல் ஈடுபட்டுள்ளது. விழுப்புரம் கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் அண்ணா சிலை அவமதிக்கப்பட்டு இருந்தது.

இதுபோன்று மேலும் பல இடங்களிலும் அண்ணா மற்றும் பெரியார் சிலைகளை மர்ம கும்பல் அவமதித்து சேதப்படுத்த திட்டமிட்டிருப்பதாக உளவு பிரிவு போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தமிழகம் முழுவதும் பெரியார்-அண்ணா சிலைகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் பெரியார்-அண்ணா சிலைகளுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

சென்னை முழுவதும் உள்ள பெரியார்-அண்ணா சிலைகளுக்கு பாதுகாப்பு அளிக்க கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து அண்ணா சாலையில் உள்ள பெரியார் -அண்ணா சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சென்னை முழுவதும் 47 பெரியார் சிலைகளுக்கும், 17 அண்ணா சிலைகளுக்கும் உரிய பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சிலைகள் இருக்கும் பகுதிகளில் போலீசார் ரோந்து சுற்றி வருகிறார்கள்.

இதேபோன்று அனைத்து மாவட்டங்களிலும் போலீஸ் சூப்பிரண்டுகள் மேற்பார்வையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Tags:    

Similar News