ஒகேனக்கல்லில் நீர்வரத்து 12 ஆயிரம் கனஅடியாக சரிவு
- கர்நாடக மற்றும் கேரளா காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது.
- தொடர் விடுமுறை காரணமாக நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லக்கு குவிந்தனர்.
ஒகேனக்கல்:
கர்நாடக மற்றும் கேரளா காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி கிருஷ்ணராஜ சாகர் அணைகள் முழுமையாக நிரம்பி உபரி நீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டது.
இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைவு காரணமாக நேற்று ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து கடந்த இரு தினங்களாக வினாடிக்கு 19 ஆயிரம் கனஅடியாக நீடித்து வந்தது.
இந்த நீர்வரத்தானது நேற்று காலை வினாடிக்கு 14 ஆயிரம் கன அடியாக சரிந்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி மேலும் சரிந்து வினாடிக்கு 12 ஆயிரம் கன அடியாக குறைந்து வந்து கொண்டிருக்கிறது.
நீர்வரத்து குறைந்த போதிலும் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
இந்த நீர்வரத்தை கர்நாடகா தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக உள்ளதால் அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடையாக தொடர்ந்து 8-வது நாளாக நீடிக்கிறது.
தொடர் விடுமுறை காரணமாக நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லக்கு குவிந்தனர். பரிசலில் சவாரி செய்து மகிழ்ந்தனர்.
அருவி மற்றும் காவிரி ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.