தமிழ்நாடு

ரூ.110 கோடி போதைப் பொருள் கடத்தலின் பின்னணியில் இருப்பவர்களை பிடிக்க வேட்டை

Published On 2024-09-27 04:32 GMT   |   Update On 2024-09-27 04:32 GMT
  • இருவரிடமும் வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  • அதிகாரிகளுக்கு தொடர்பு இருந்தால் அவர்களை கைது செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சென்னை:

சென்னை துறைமுகத்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து அதிகாரிகள் அங்கு விரைந்து சென்றுஅதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஒரு கண்டெய்னரில் 'குவார்ட்ஸ்' பவுடர் பாக்கெட்டுகளுடன் 112 கிலோ சூடோ பெட்ரின் போதைப் பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.110 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த போதைப் பொருட்களை சரக்கு கப்பல் மூலமாக ஆஸ்திரேலியாவுக்கு கடத்த இருந்ததை கண்டுபிடித்து அனைத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக துறைமுக ஏஜெண்டுகள் இருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான ஏஜெண்டுகளின் பெயர் அபுதாகிர், அகமது பாஷா என்பது தெரிய வந்தது. இருவரிடமும் வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த போதைப் பொருள் கடத்தலின் பின்னணியில் இருப்பவர்கள் யார்-யார்? என்பது பற்றிய விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. துறைமுக ஏஜெண்டுகள் இருவர் மூலமாக ஆஸ்திரேலியாவுக்கு போதைப் பொருட்கள் கடத்துவதற்காக துறைமுகத்துக்கு போதைப் பொருட்களை அனுப்பி வைத்தவர்கள் யார்? என்பது பற்றிய விசாரணையை தீவிரப்படுத்தி உள்ள அதிகாரிகள் இதில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய அதிரடி வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் கண்டெய்னரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதைப் பொருட்கள் துறைமுக அதிகாரிகள் யாரும் உடந்தையாக இருந்தார்களா? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் அதிகாரிகளுக்கு தொடர்பு இருந்தால் அவர்களை கைது செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News