தமிழ்நாடு

கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து வினாடிக்கு 17,281 கனஅடியாக அதிகரிப்பு: காவிரியில் வெறும் 2592 கனஅடி தண்ணீரே திறப்பு

Published On 2023-10-03 03:51 GMT   |   Update On 2023-10-03 03:51 GMT
  • கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டதாலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து காணப்படுகிறது.
  • அணையில் 9.83 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது.

சேலம்:

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததாலும், கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டதாலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து காணப்படுகிறது.

நேற்று காலை அணைக்கு 3ஆயிரத்து 122 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று 1560 கனஅடியாக குறைந்தது. மேலும் அணையின் நீர்மட்டமும் 35.38 அடியாக குறைந்து விட்டது. தற்போது அணையில் 9.83 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது.

இதற்கிடையே கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால் அங்கு உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி கபினி அணைக்கு வினாடிக்கு 5ஆயிரத்து 481 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதேபோல் கிருஷ்ணராஜசாகர் அணைக்கு வினாடிக்கு 11ஆயிரத்து 800 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து 1592 கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. 2 அணைகளுக்கும் வினாடிக்கு 17ஆயிரத்து 281 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் 2 அணைகளில் இருந்தும் வினாடிக்கு 2ஆயிரத்து 592 கனஅடி தண்ணீரே காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News